Wednesday, March 18, 2009

நிஜம்

ஓடிக்கொண்டிருக்கும் ஒற்றை அடிப்பாதை
நான் போட்டதல்ல
நீ போட்டதுமல்ல...

வாழ்க்கை
நீ கேட்டு வந்ததல்ல
நான் கேட்டு தந்ததல்ல

ஏற்றுக் கொண்ட
பயணத்திலே
தொடக்கம் தெரியாது
முடிவும் தெரியாது

ஓவ்வொரு நாளும்
இமைகள் விழிக்கும்
தருணம் தானே
ஜனனம்

இரவை தொடர்ந்து
இயக்கம் மறந்து
தூங்கி கிடக்கும்
மரணம்

இருக்கும் காலம்
நிம்மதி தேடி
நம்மில் எத்தனை
உள்ளம்?

அறியா பிள்ளைகள்
ஆகும் நம்மை
அறிய வைக்கும்
தருணம்

ஓடிக்கொண்டிருக்கும்
ஒற்றை அடிப்பாதை
நான் போட்டதல்ல
நீ போட்டதுமல்ல...

ஒவ்வொரு நாளும்
ஒரு முறை யாவது
உன்னை சற்றே
உற்றுப் பார்

உள்ளே இருக்கும்
உதவா அழுக்கை
உதறித் தள்ளி
வாழ்ந்து பார்

கவலை என்பது
சுயநலத் தாலே
சூழ்நிலை யறிந்து
வாழப் பார்

ஆசைச் சேற்றில்
அழுகும் உன்னை
அன்பை கொண்டு
கழுவப் பார்

நல்ல எண்ணம்
நல்ல செயலே
நலமே வேண்டும்
நயத்தைப் பார்

வாழ்க்கை
நீ கேட்டு வந்ததல்ல
நான் கேட்டு தந்ததல்ல


உறவுகள் புனிதம்
உள்ளது அறிந்து
உய்யும் ஞானம்
சேர்க்கப் பார்

இங்கு
நிஜத்தை நோக்கி ...

ஓடிக்கொண்டிருக்கும்
ஒற்றை அடிப்பாதை
நான் போட்டதல்ல
நீ போட்டதுமல்ல...


No comments:

Post a Comment