Monday, March 30, 2009

நீ...

முதல் முதல் வந்த உணர்வு
உன்னில் மூழ்க வைத்தது
உன் நினைவுகள் ஏனோ என்னை
எனையே மறக்க வைத்தது

ஒரு கனவில் எங்கோ என்னை
கைபிடித்து சென்றது- எங்கு
செல்கிறோம் என்றேன்.
நானம் இதழில் சிரித்தது...

விழிகள் பேசிய மௌனம்
இதயம் புரிந்தது-சில
நொடிகள் வானில் பறந்து
பறவை ஆனது

மூச்சுக் காற்றில் காதல்
கீதம் இசைத்தது- மோகம்
பாஷை ஆக முடிவை
மறந்தது ...

காதல் செய்த மாயம்
கண்ணில் தெரிந்தது
கனவுகளை எதிர் பார்த்து
உள்ளம் தவத்தில் கிடந்தது

நீ முதல் முதல் வந்த உணர்வு....

Wednesday, March 18, 2009

நிஜம்

ஓடிக்கொண்டிருக்கும் ஒற்றை அடிப்பாதை
நான் போட்டதல்ல
நீ போட்டதுமல்ல...

வாழ்க்கை
நீ கேட்டு வந்ததல்ல
நான் கேட்டு தந்ததல்ல

ஏற்றுக் கொண்ட
பயணத்திலே
தொடக்கம் தெரியாது
முடிவும் தெரியாது

ஓவ்வொரு நாளும்
இமைகள் விழிக்கும்
தருணம் தானே
ஜனனம்

இரவை தொடர்ந்து
இயக்கம் மறந்து
தூங்கி கிடக்கும்
மரணம்

இருக்கும் காலம்
நிம்மதி தேடி
நம்மில் எத்தனை
உள்ளம்?

அறியா பிள்ளைகள்
ஆகும் நம்மை
அறிய வைக்கும்
தருணம்

ஓடிக்கொண்டிருக்கும்
ஒற்றை அடிப்பாதை
நான் போட்டதல்ல
நீ போட்டதுமல்ல...

ஒவ்வொரு நாளும்
ஒரு முறை யாவது
உன்னை சற்றே
உற்றுப் பார்

உள்ளே இருக்கும்
உதவா அழுக்கை
உதறித் தள்ளி
வாழ்ந்து பார்

கவலை என்பது
சுயநலத் தாலே
சூழ்நிலை யறிந்து
வாழப் பார்

ஆசைச் சேற்றில்
அழுகும் உன்னை
அன்பை கொண்டு
கழுவப் பார்

நல்ல எண்ணம்
நல்ல செயலே
நலமே வேண்டும்
நயத்தைப் பார்

வாழ்க்கை
நீ கேட்டு வந்ததல்ல
நான் கேட்டு தந்ததல்ல


உறவுகள் புனிதம்
உள்ளது அறிந்து
உய்யும் ஞானம்
சேர்க்கப் பார்

இங்கு
நிஜத்தை நோக்கி ...

ஓடிக்கொண்டிருக்கும்
ஒற்றை அடிப்பாதை
நான் போட்டதல்ல
நீ போட்டதுமல்ல...


Saturday, March 14, 2009

தாயே போற்றி!

நீயின்றி நெஞ்சம்
தவிக்கிற தம்மா - உன்
நினைவுகள் என்னை
வாட்டுதே அம்மா

நெஞ்சம் நெகிழ்கிற
வாழ்க்கைதான் அம்மா- என்
கண்ணீர் துடைத்திட
நீயில்லை அம்மா


காலத்தின் கோலம்
பிரித்ததே அம்மா-நீ
ஒருவார்த்தை சொல்லாது
சென்றதேன் அம்மா

வாங்கிய வரங்கள் வேதனை அம்மா - உன்னை
பிரிந்த பின் ஆயிரம்
சோதனை அம்மா
அவை கேட்டிட நீயும் அருகிலை அம்மா

உன்னை போல்
எனையும் பார்த்திட ஒருத்தி
வந்ததால் போனாயோ
என் அன்பம்மா

தாயின்றி வாடும்
சேஎனை பார்க்க

எங்ஙனம் உன்னால்
இயல்கிற தம்மா?

ஓரளவேனும் உள்ளம்
மனிதம் கற்றது
உன்அன்பே உயர்
பண்பே அம்மா

உனைப் பிரிந்திருக்கும்
இத்தவிப்பொரு கொடுமை
உனைப்போல் தாய்
இருப்பது நினைவில்
உலகில் வாழ்ந்திட
உதவிடும் நன்மை.

நீயில்லை என்றிடல்
தவறென உணர்ந்தேன்
நினைவும் செயலும்
நீஎன் றறிந்தேன்

தாயே போற்றி! தாயே போற்றி!

இலக்கை தேடி...

வயது 44.
வாழ்க்கையின்
எதிர்பார்த்த அரைபாதி
எப்படியோ
கழிந்த பெருமூச்சு.

உடல் வளர்ந்தாலும்
மனம் வளராத மந்த நிலை..

கற்க கசடற...
வள்ளுவம் சொன்ன
இரண்டு வரி தத்துவம்
புரிந்தால்
கற்றவை கற்றபின்
நடந்தால்
நன்மை உண்மை

யாரால் இயலும்?
ஒவ்வொரு நொடியும்
தவம் செய்யும்
நிலை வேண்டும்...

மனிதம்
சாதாரணம் அல்ல...
அன்றாட விலங்கினமாய்
அவதி!

சூழ்நிலை சூறாவளி
சூன்ய வாழ்க்கை
சோக மயானத்தில்
சுடலை போல்
தனியே செல்லும்
பிறப்பின் தாகம்

பித்தம் பிணக்கு
பிரிவினை கணக்கு
வருமான வரிகளால்
வாழ்க்கையின் இலக்கு

அன்பை தொலைத்து
அறிவை அழுக வைத்து
ஆசை சொப்பனங்களுடன்

எங்கே செல்கிறேன்?
எங்கே செல்கிறேன்?

முகவரி

நீ
என்
மூச்சின் முகவரி

இதயத்தின்
வீதிகளில்
எங்கு பார்த்தாலும்
உன் பிம்பங்கள்

நீ
நான் மட்டும்
உணர்ந்த சுகம்

மின்மினிப் பூச்சிகளாய்
நட்சத்திரங்களாய்
தென்றலாய்
மலர்களின் சுகந்தமாய்
என் மனித வாழ்வின்
மறு பிறப்பாய்

என்னை எனக்கு
அடையாளம் காட்டி...

என்னை எனக்கு
அறிமுகம் செய்த

அன்பே
நீ
என்
மூச்சின் முகவரி...

என் புத்தகம்...

எழுத முயற்சித்த தருணங்கள்...
எண்ணத்தின் மோதல்கள்
எதை சொல்வது
என்ற கேள்விகள்....
மனம் மக்காய் முழித்தது!

பல வருடம் பின் சென்று
மட்டப்பா தெருவினிலே
எதை செய்வது என்று தெரியாமலே
ஓடித் திரிந்த கதை சொல்வதா

இரவு நிலா தந்த பயம்
குடை பிடித்து வானத்தை
மறைத்த கதை சொல்வதா

ஒன்பது வயதினிலே
அண்ணன்மார் புகை விட்ட
ஸ்டைல் பிடித்து
நைனாருடன் பிடித்த
பீடி கதை சொல்வதா?

மேற் படிப்பு என்று சொல்லி
மெட்ராஸ் போன அண்ணன்
பிரிவாலே அழுது மனம்
துடித்த கதை சொல்வதா?

அண்ணன் வேலையில்
சேர்ந்து விட்டாங்க
இனி மெட்ராஸ்தான்
என்று எதிர் பார்த்த கதை சொல்வதா?

பட்டினத்தில் குடி புகுந்த
முதல் நாளே
அண்ணன் காதலித்து
மணம் செய்த புது அண்ணி
அழ வைத்து மனம் நொந்த
அருங் கதையை சொல்வதா?

ஆங்கிலம் வராது என்றால்
அதை நீ எழுதாதே
அப்படி சொன்ன மாமா வார்த்தை

பாடாதே அது சகிக்கவில்லை
என்று சொன்ன அண்ணன் வார்த்தை

முயலாதே அது வீண்
என்று சொன்ன அப்பா வார்த்தை

ஊக்கம் தராத அந்த நொடிகள்
செய்த தாக்கம் பற்றிச் சொல்வதா?

இரண்டு வரிகள்
எழுதி அதைநான்
கவிதை என்றபோது
ஆஹா அருமை
என்று சொன்ன நண்பன்

கணக்கு வாத்தியார்
அடிக்கு பயந்து
கட்டுரை போட்டியில்
பங்கெடுத்து
பள்ளியில் முதலாய்
வந்த போது
சூப்பர்டா மச்சி என்று
சென்னை தமிழில்
நண்பன் சொன்ன
சீர்திருத்த வாழ்த்தை சொல்வதா?

வாழ்க்கையின் வழியில்
வலியின் மைல் கற்கள்

ஏனோ தெரியவில்லை
காலை நேரத் தனிமையிலே
எத்தனையோ எண்ணங்கள்

கதை கதை என்று
வாழ்க்கையிலே
எத்தனை பக்கங்கள்!

நான் எதை சொல்வது?
ஆசைகளின் பாதையில்
பயணங்கள் ...

கண் அயர்ந்தால்
கொன்று விடும் திருப்பங்கள்

நேற்று இருந்தது
இன்று இல்லை
இன்று இருப்பது
நாளை இருக்குமா

சுகமும் துக்கமும்
உறவுகள் !

இரண்டுமே மனதின்
திறவுகள்!
வாழ்க்கை விதியின்
விரிவுகள்...

எதை எழுதுவது?
எதை சொல்வது?
போகிறேன் ....
என் புத்தகம்
நானே எழுதுகிறேன்
நானே படிக்கிறேன் ....

Friday, March 13, 2009

சக்தி கொடு

நிழல் போலே இச் சோகம்
நெருடித்தான் வருகிறது
நிஜத் தீயின் வெப்ப நா
நீசத்தில் எரிக்கிறது

கனவாலே உருவாகி
காலமது செல்கிறது
காற்றாகும் நாள் வருமுன்
வெல்வேனா
சக்தியே சொல்!

கசை கொண்டு அடித்துஎனை
திசைநேர் நீ கொண்டுசெல்
களைபோலே வாழும் எனை
முளையருத்து தளையாக்கு

அம்மா நீ பெற்ற மகன்
அறிவிலியாய் வாழ்ந்திடலா?
அறிவின்றி அழிந்திடல் மேல்
அகம் திற அறிவு திற...
அருள் தருவாய் அன்னையே!

Thursday, March 12, 2009

விசும்பல்கள்

விடியும்...
கண் விழித்து பார்க்கையிலே
இருட்டு வரும் ...
குளிர் கால கோலத்தை
பனி போடும்

கனடா வாழ்க்கை
காலச் சக்கரத்தின்
வேகச் சுழற்சி
மனித நேயம்
மாயமாய் மறைந்த
வினோத வாழ்கை ...

நீயா நானா
வினாக்கள்
அளவுகோல் உறவுகள்
அகங்கார உணர்வுகள்

நெஞ்சுக்கு வலிக்கும்
புண்களை ஆற்ற
போதை மருத்துவம்
தலைவலி உறக்கம்
காலையில் கடவுள்
கண் மூடி வேக வேண்டுதல்கள்

பொங்கல், தீபாவளி, அது இதுவென்று ....
நைய புடைக்க
நாக்கின் தவங்கள்...

நாம் யார்
என்ற கேள்வி
நாயகமாய்...
வாழ்கையின் தெருக்களில்
வழி தெரியாமல்
ஒரு உற்சவம்!

அப்பாவின் வார்த்தைகள்
காதுகளில்...
இக்கரைக்கு அக்கரை பச்சை

என் சன்னலின் வழியே...

சொல்லத் தெரியாமல்
வந்து நின்ற காற்றை
சுவாசம் வரவேற்றது!

வானம் கண்களின் இமைகளானது...

நான் இயந்திர உலகின்
இந்திரன் ஆனேன்

நிதர்சனம்
சகிக்க முடியாத நிர்வாணம்

பொய்களின் போர்வையில்
புனிதம் பேசும் புது மனிதர்கள்..
மனிதன் மனிதன்தான்!
மற்ற விலங்கினச் சாயல்!
மாற்றவா இயலும்?

சுற்றி சுற்றி
வந்து நின்ற காற்று
சுவாசம் நிர்பந்த வரவேற்பு!

நேயம் ஒரு நியதி...
புணர்ச்சியின் புனிதம்.
மோகமுத்தங்கள்
பரிணாம தொடர்ச்சியாய்
பரிமானம் ஆனது!

உள்ளும் வெளியும்
ஒரு போராட்டம்!

மனிதன் மனிதன்தான்....