Monday, May 25, 2009

வீரத் தமிழரை வணங்குவோம்...

உயிர்கள்
எங்கிருந்தாலும்
உயிர்களே!
எப்படியிருந்தாலும்
உயிர்களே!
எல்லா உயிர்களுக்கும்
சுதந்திர மூச்சில்தான்
சுகம் என்பதை
சொல்லியா தெரிய வேண்டும்?
மூச்சு விடுவதற்கும்
கண் விழிப்பதருக்கும்
கப்பம் கட்டும் வாழ்க்கை
அடிமைத்தனத்தின்
அடக்குமுறை...
மனிதத்தின் உரிமைகளை
சுமூகமாய் கேட்ட போது
பலவந்தம் காட்டி
அராஜகம் செய்தது...
அரசாங்கம் என்ற பெயரில்
சர்வாதிகாரம் செய்தது.
வரலாற்றின் ஏட்டுகளில்
பலமுள்ளவன் பதிகின்றான்...
பலமற்றவன் சிதைகின்றான்...
சுதந்திரம் வேண்டும் என்று
சுதந்திரமாய் உள்ளவன் சொல்வதில்லை!
சுதந்திரம் கேட்டவன்
சுதந்திரத்தைப் பறிப்பது
மனிதாபிமானம் இல்லை...
சுயநலச் சகதியில்
அரசியல் சூது.
தீவிரவாதி என்றும்
தீவினை செய்பவன் என்றும்
சுதந்திர விரும்பி
பட்டம் பெறுகிறான்
உள்ளங்களும்
நல் உணர்வுகளும்
மதிக்கப்படாததால்
போரில் இறங்கிய புலிகளில்
தமிழனாய் வாழ்ந்து
தமிழீழம் வேண்டி
தம்மை அர்ப்பணித்த
தமிழ் மகன் பிரபாகரன்...
போரில் வீர மரணம் அடைந்தான்...
தமிழ் தமிழ் என்று சொல்லி
தமிழன் மறைந்தான்...
ஆயிரமாயிரம் உயிர்கள்
ரத்த ஆற்றில் மூழ்கின

நாடு விட்டு தப்பியவர்
நான்கு நாட்கள் போராட்டம்
எம்மவரை காத்திடுங்கள்
என்று சொல்லிக் கதறிய பின்
தத்தம் வாழ்க்கைச் சிக்கல்களை
சிலாகிக்க சென்றுவிட
தமிழனாய் கண்கள் பனித்தன
தமிழனாய் மனம் துடித்தது...
தமிழன் தொடங்கிய
போராட்டத்தில்
தன்மானம் இருந்தது
தாய் நாடென்று கருதிய இலங்கை
அவமானம் செய்தது...
தமிழன் தன் சுதந்திரம் காக்க
தாங்கிய புலிக்கொடி
தரணியிற் பறந்தது
தமிழர் உயிரினைக் கொண்டது...
போர் என்று வந்து விட்டால்
உயிர் மாய்ப்பதும்
மடிவதும் மரபுகள்.
அரசியல் சூசகம்
மக்களை பற்றிய அக்கறையின்மை
சர்வாதிகார போதையும்தான்
தமிழனை மதிக்காத பகட்டானது...
வேண்டிய சுதந்திரம்
எட்டாக்கனியாய்
போனதோ நண்பா?
வேட்கை தீர்த்திட
வேதனை சேர்ந்து
வஞ்சகம் கொண்ட
நெஞ்சினர் நம்மை
வாட்டிட போட்ட திட்டமோ நண்பா....
வீரப்போர் புரிந்து
தமிழனாய் மண்ணில்
தலை சாய்த்த வீரரை
தமிழர் என்ற முறையில்
வணங்குவோம்
சுயநலம் இல்லாமல்
பொதுநலம் வேண்டி
நடந்த புனிதப் போரில்
உயிரினை இழந்த
தமிழீழ தணயரை போற்றுவோம்...
சுதந்திரம் கேட்ட
உயிர்களின் ஓலம்
போர்முனை புழுதியில்
சமாதியாகிட
சொந்தமும் பந்தமும்
வாழ்க்கையை தேடிட
மடிந்தவர் ஆத்மாவின்
தாகம் தீருமா?
சுதந்திரம் எது என்று
தெரியாமல்
வீரப் புலிகளாய்
மாய்ந்தவர் ஆன்மா
சாந்தியடைந்திட
வீர அஞ்சலி செலுத்துவோம்...
வீரத் தமிழரை வணங்குவோம் ...

Sunday, May 24, 2009

தமிழன் எங்கே?

கதறல்கள்...
உயிரின் ஓலங்கள் ...
கண்ணீர் சுட்ட கன்னங்கள்
கருவிழி வட்டங்கள்
செந்நீர் சிந்திய
சகோதரர்கள்....
இலங்கை எரிய
எத்தனை ராவணர்கள்?
கேட்டது தவறா?
சிந்தியுங்கள்...
சுதந்திரம்
எமது பிறப்புரிமை
என்ற மொழி தவறா?
உணர்வு தவறா?

நீங்கள் சற்றே
எம்மிடத்தில்
இருந்து பாருங்கள்...
உயிரை விட்டு
உருக்குலைந்து
சின்னா பின்னமாய்
உறவுகளை தொலைத்துப்
பாருங்கள்...

உங்கள் வீட்டு
சன்னல்கள்
ஏன்
மூடப்பட்டே உள்ளன...

வெளியே வேகும்
தமிழன் சடலங்கள்
திரைத்துளியும்,
பாடல் நாடகங்கள்
பார்க்கும்
தொலைகாட்சி
சுகங்களாகவா போய் விட்டன?

உங்கள் சுவாசத்தில்
கவலையின் பயமில்லை
உறவுகள் இறக்கும்
சோகம் இல்லை

எட்டாத தூரத்தில்
தமிழன் என்று சொல்லி
தொடாத உறவுகளின்
அந்நியமாய்

வாழ்க்கையின் வரலாற்றில்
வாழும் களைகளாய்
வாழ்ந்த பொய்களின்
நிஜச் சாயல்களாய்...

தமிழா என்று நான் அழைக்கலாமா?