Monday, January 25, 2010

துளிகள்...

எப்போதும் எனைப்பற்றி
ஏன் பரிசீலனை?

பூட்டிய கதவுகளின்
புழுதி துவாரங்களில்
வெளிச்சமாய் நீ
வரைந்த ஓவியங்கள்...

பேசாமல் இருக்கும்
வாய்க்குள்
பேசிய வார்த்தைகள்
சுகமாய் உன்னுடன்
வாசித்த கவிதைகள் .....
உன்னையே இதயம்
சுற்றிய போது
சுவாசித்த சுவடுகள்...

இயற்கையின் விதிகளில்
இயங்கும் சோதனைச் சுவடிகளில்
மனிதக் கருவூலங்கள்...

மதியின் மதியில்
மறுபடிச் சுரக்கும்
மனதின் ஊற்றுக்கள்...

ஒவ்வொரு வாழ்வும்
ஒவ்வொரு வகையில்
ஒவ்வொரு ஓவியமே
படிக்கத் தெரிந்த
பார்வைக்கெல்லாம்
ஒவ்வொரு காவியமே!

வாழ்க்கை வானம்
விரிந்து கிடக்கும்
தூரம் தெரியாது
போகப் போக
எல்லைகள் எங்கே
எனக்குத் தெரியாது....

தூரம் தேடி போகும் முன்னர்
செய்யும் பயிற்சிகள்...
அகிலம் அளக்க
அளவுகோல் இல்லை
அதனால்தான்
அணுவை அளக்க முயன்றேன்...
இதய அணுவை துளைக்க முயன்றேன்...


கடவுள் படைப்பில்
தெரியும் துளிகள்
ஒவ்வொன்றிலுமே
உலகின் அர்த்தம்
உறைந்து கிடக்கும்
உறவை உணர முயன்றேன்...

அப்படியிருந்தும் ஏன் கேட்கிறீர்கள்?
என்னைப் பற்றியே
எப்போதும் ஏன் பரிசீலனை என்று?

Saturday, January 23, 2010

எண்ணக்குமிழ்

எண்ணக்குமிழ் ஒன்று
எனக்குள் எழுந்தது...
என்னை விட்டுவிட்டு
எங்கோ திரிந்தது

கனவின் சுதந்திரமாய்
காற்றில் பறந்தது...
அருவமாய் உணர்விற்கு
பாலம் அமைத்தது

உலகின் பரப்பையெல்லாம்
நொடியில் கடந்தது
உன்னைக் கண்டது
பிம்பமாய் பிரதியாக்கி
உள்ளச் சுவர்களிலே
ஓவியமாக்கியது

சாத்திரம் கோத்திரம்
சாதகம் மறந்தது
சூத்திரம் சூசகம்
யாவும் இல்லாமல்
அன்பில் ஒளிர்ந்த
ஒளிவட்டமாய்

இதய வானில்
இதமாய் பறந்தது
என்னில் பிறந்தது
எங்கோ கலந்தது

காதல் காற்று போல்
கண்ணிற்கு தெரிவதில்லை
காதலே காற்றாகி
சுவாசிப்பேன் தெரிவதில்லை

எண்ணக் குமிழ் ஒன்று....