Thursday, October 8, 2009

சிந்தையை தொலைத்துவிட்டேன்...


நல்ல நிலவொளியில் நயமான தென்றலுடன்
தெள்ளத் தெளிவு தரும் இதமான மன நிலையில்
உள்ளத் துறவுகளை உயர் பாங்கில் வளமாக்கி
சொல்லத் துடித்த மனம் சுகந்தங்கள் கொண்டதடி

கள்ளமில்லா தூரத்தில் வான் பரந்த பட்சிகளின்
கானங்கள் மனம்நிரப்ப செவ்வான புரவியிலே
கோலங்கள் இட்டரவி தேனான சிந்தையினை
மாயங்கள் செய்து மயக்கிடத்தான் வைத்ததடி!

நானம் கொண்டவளாய் பனித்திரைக்குள் ஒளிந்து
வதனம் மறைத்தவளாய் நின்ற நங்கை
கைபிடித்து சென்றசுகம் கனவுலகாய் சிலிர்த்த
ஜாலம் செய்ததெல்லாம் இயற்க்கைக்குமரியடி ...

உள்ளத்தில் கசந்திடும் ஒவ்வொரு நாட்சுமையும்
ஒருகணத்தில் மாற்றிவிடும் தாயின் அரவணைப்பாய்
யுகமாய் வீற்றிருக்கும் அவள் மடியில் முகம் புதைத்தால்
சகத்தில் பிறந்ததற்கு நல்ல பலன் ஆகுமடி...

அவளழகு இல்லாத ஒருதிசையும் இல்லையடி
அவள்மீது கொண்ட மோகம் தீராத தாகமடி
நினைவோடு நானென்ற அகங்காரம் நலமாக
நிஜமான ஓருருவாய் கற்பித்த ஆசானாய்

நீசம் செல்லும் வரை அவளோடு வாழ்ந்திடுவேன்
நித்தம் முத்தமிடும் அவளோடு மாய்ந்திடுவேன்
என்னே அழகு என்று சுகம்கொள்ளும்
இந்த நினைவினிலே சிந்தையை தொலைத்துவிட்டேன்
கண்ணே நீ கொஞ்சம்
கவலைகளை விட்டுவிட்டு
என்னோடு வந்திடுவாய்...
இவள் எழிலில் கலந்திடுவாய்....


முகில்.