Wednesday, April 29, 2009

கொஞ்சம் அழுது கொள்கிறேன்...

ஒவ்வொரு மனமும் எப்போதாவது
அனாதையாகும்...
தனக்குத் தானே தவித்துக் கொள்ளும்.
உறவுகள் ஆயிரம் இருந்தும்
துறவறம் பூண்டிருக்கும்

ஏக்க சிறையினில் தன்னை
தானே அடைத்துக்கொள்ளும்
வினோத வலைக்குள் சிக்கிய
மீனாய் பரிதவிக்கும்

காலத்தின் கண்ணாடியில்
வழுகிச் செல்லும்
வாழ்க்கை பயணத்தில்
தனிமை கொண்டு
அமைதி இழக்கும்...

வளர்ந்தும் மனதில்
குழந்தையைப் போலே
வாடி நிற்கும்...

வானம் பார்த்து
இமைக்காது
கற்பனை சிறகுகளில்
அபிநயம் பார்க்கும்...

தன் உணர்வுகளையது
சொல்லத் தவிக்கும்
அன்பு தேடும்

மறைந்து ஒளிந்து
மாயை கவலைக்குள்
மறுதலிக்கும்

மனம் என்ற மாயை
நம்மை மறுபடி மறுபடி
எங்கெங்கோ கூட்டி செல்லும்.

வழி தெரியாமல்
வாழ்க்கை காட்டில்
ஏனோ தெரியவில்லை
தன்னை தானே
அனாதையாக்கும்

ஏன் என்ற கேள்விக்கு
விடை தெரியாமல்
விடுகதையாக்கும்...

Saturday, April 11, 2009

நீ...

ஒரு பட்டாம்பூச்சி போல்....

கண்களில் வண்ணமானாய்!

உன்
நினைவுகள்
படபடக்கும்
நெஞ்சில்
ஒரு சுகம்

எப்படியோ
முளைத்த சிறகுகள்
எங்கேயோ பறக்க வைக்கும்

காதல்
பூக்களாய்
நெஞ்சில் சோலையாகும்

மனதின் வீதிகளில்
சுற்றி சுற்றி
உனையே எண்ணும்
உணர்வின் சுகந்தமாய்

உன் விழிப் பார்வைகளை
மலர் என்று கண்டு
தேன் உண்ணும் வண்டு போல்

தெரியாத தூரங்கள்
திகட்டாத தேன்
சுற்றி சுற்றிவரும்

ஒரு
காதல் பட்டாம் பூச்சி.....

மறுபடியும்....

உள்ளம்
ஏதாவது உளரும்
தனக்குத் தானே
அறை கூவும்

எண்ணத்தின் வேகத்தில்
இதம் காணும்.

நிஜம்
சட்டென்று விழுந்த
முட்டுக்கட்டையாய்
கற்பனை கோட்டையை
தகர்க்கும்

இதயம் பரிதவிக்கும்
இயக்கம் நடுங்கும்

எல்லாம் மாயை
என்ற சிந்தனை
கோடி ஏற்றும்

வேதனையே வாழ்க்கை
என்ற வேதம்
நினைவில் வரும்

கற்பனையில் மறுபடியும்
சுகம் நெருடும்
மறுபடியும்
நிஜம் நெருடும்....
மறுபடியும் மறுபடியும்....

Thursday, April 9, 2009

கேள்வியும் நானே பதிலும் நானே

கேள்வி ஒன்று வந்தது -பதில்
தேடி மனம் அலைந்தது
வாழ்க்கை போன வேகத்தில் -ஒரு
வரம்பு அற்றுப் பாய்ந்தது
ஆசை கோடி கொண்ட நெஞ்சை
அமைதி கொள்வ தெப்படி
ஒன்றிரண்டா ஆசைகள்
இதய மாயை அப்படி..

மனிதராகப் பிறந்த நாம்
வேண்டுவது என்ன?

மனித வாழ்க்கை அரிதென்றால்
மானுடம்தான் என்ன?

கேள்வி ஒன்று பலவாக
பிறவிபல எடுத்தது...
பதில் அறிய இதயத்தின்
சுவர்களிலே பொரித்தது

ஒரு கூட்டுக் கிளியாக
வழி தேடி தவித்தது
பறந்துயரப் பார்த்திடவே
மொழி கூவி கேட்டது....

ஈசல் போல செல்லுகிற
பயணமிதில் படபடத்து
உள்ளுணர்வின் எதிரொலியை
உணராமல் தவிதவித்து
சாயங்கள் பூசி பொய்க்குள்ளே
புதைவோம்...சாத்திரங்கள் பேசி
வேஷங்கள் புணைவோம்...

வாழ்க்கை என்ற வாசகம்
கருவறையில் தொடங்கும்
கல்லறையில் முடியும்

நாடகத்தில் நாயகராய்
நடிக்கின்ற காட்சி
முடிகின்ற தருணத்தில்
அழும் மனசாட்சி

தொடக்கம் என்றிருந்தால்
முடிவும் உண்டு அறிவோம்
அடக்கத்தில் அன்பு செய்து
ஏன் வாழ்தல் ஆகாது
குறைகள் இல்லா சிருஷ்டி எது
நிறைகளில் நாம் மகிழ்வு கொள்வோம்

சிறைக்கதவை திறந்திடுவோம்
சிறகுகளை விரித்திடுவோம்

Wednesday, April 8, 2009

நலமா?

நாட்கள் ஓடும்
வாழ்க்கை ஓடும்
இதயம் என்ற
ஏடு மட்டும்
நினைவுக் காற்றில்
பக்கம் புரட்டும்....

அன்பு கலந்த
பக்கங்களின்
அருமை நாட்கள்
புதிய படங்களாய்
பளிச்சிடும்....

யாராய் எப்படியும்
எங்கே இருந்தாலும்
உணர்வின் நரம்புகளில்
இதமாய்
நல்ல உறவுகளின்
உன்னதம்
உரம் சேர்க்கும்....

வாழ்க்கை கடலில்
மூழ்கிய பின்னர்
நீச்சல் தெரியுமா
என்று கேட்ட
விதியின் முன்னால்
வீரப்போர் புரிந்த
புனிதர் போலே

நம்மில் எத்தனை பேர்?

வெற்றி இலக்கில்
எத்த்னை பயணங்கள்!

எங்கு செல்கிறோம்?

சுற்றிச் சூழும்
சூறாவளியில்
பயணத்தின் பாதைகள்

காற்றில் புரண்ட
வாழ்க்கைப் புத்தகத்தின்
ஏதோ ஒர் பக்கத்தில்
எழுதிய கவிகளில்
அன்பினால் சுரந்த
நட்பை நினைத்து
இத்தருணத்தில்...

மறுபடி பிறக்கிறேன்

நலமா நண்பா?