Sunday, July 25, 2010

நிஜம் என்ற நடிப்பு...


நிகழ்வு!

வேண்டியபடி இருக்கும்
தருணம்.

மகிழ்வு.....

மனித மனம்...
மனநிலைகள்...
மறுபடி மறுபடி
தன் சுகம்...

எண்ணங்கள்
நிறைவேறாத
எதிர்மறை

எதிரி போல்...
ஒரு உண்மை
உதாசீனப் படுத்தப்படும்.

இது என் இயல்பு
என்ற உண்மை

மனம் உணரும்.
மனநிலை உணராத
ஒரு
அந்தரச் சுகத்தின்
அகராதி போல்

நான்...
நிஜம்...
நடிப்பு....
இயக்கம்...
இந்த வாழ்வு!

ஒரு முறை
உண்மை பேசு!

உண்மையை
உணர்ந்து....
உன்னையும்
உணர்ந்து!

நிஜம் என்பது நடிப்புதான்....
வாழ்க்கை என்பது நடப்புதான்!

Friday, July 16, 2010

முனிவன்!


விழியின் சாளரங்கள்
திறந்தாய்...

உன் பார்வையில்
நான் வீழ்ந்தேன்!

உன்னையறியாமல்
ஒரு பிம்பமாய்
உன் விழித்திரையில்!

நீ
இமை மூடிய
பொழுதுகளில்
என்னைச் சிறையிட்டாய்

இமைச் சிறகுகளால்
வீசி
வசியம் செய்தாய்

என் கவிதையின்
எழுத்துக்களாய்
எனக்குள்
எழுதிய
என் காதல் புத்தகத்தின்
அத்தியாயங்கள்
உன் முகவுரையே....

படித்து முடிக்காத
பக்கங்களாய்
என்னுள்

ஒவ்வொரு வினாடியும்
இதயத்தில்
பிரசவித்தாய்

நான் முதன்முறை
முக்காலமும்
உணர்ந்தேன்!

ஒரு காதல் முனிவனாய்....


-முகில்

(பட உதவி: BostonHerald)

Wednesday, July 14, 2010

ஞாபகம் மறந்த போது....

நடக்கும் பருவம்
வந்த பின்னும்,
ஒரு
சிறு
தவழும் இயந்திரப் பொம்மை கண்டு
அழுத ஞாபகம்....

அம்மாவைப் பிரிந்து
பள்ளி சென்று
'அ'னா எழுதிட
அழுத ஞாபகம்....

சிறு குடும்பத்தின்
சிறகுகளாய்...
கூடப் பிறந்த
அண்ணன்களைக் காண
ஆசை ஆசையாய்
துடித்த ஞாபகம்.

அம்மாவின் கதைகள்
கோயில் புளியோதரை
நண்பர்களுடன் பம்பரம்
நையாண்டி,
நமட்டுத்தனக் குத்தகை ஞாபகம்....

பள்ளியில் புத்தகத் திருட்டு
படமில்லாத புத்தகம் வெறுப்பு
ஆங்கிலம் என்றாலே
அழாத குறையாய்
காதினில்
விழாத ஞாபகம்...

இரவினில் ஏனோ
நிலவுக்குப் பயந்து
நிலவை மறைக்க
குடை பிடித்த ஞாபகம்.

ராஜா செருப்பு போல்
வளைந்த காலணி
அணிந்து நடித்த
நாடகம் ஞாபகம்...

அதே உடையில்
அறியாத கம்பீரம்
அழகென்று எண்ணி
ஊர்வலம் வந்து
ஊரார் பார்த்திட
அலைந்து சுற்றிய
நாட்கள் ஞாபகம்.

ஆட்டமும் ஓட்டமும்,
ஆங்காங்கே திரிந்ததும்,
நாட்கள் ஓடியும்
நண்பர்கள் மட்டும்
நினைவினில்
நிறைந்த ஞாபகம்....

பள்ளியில் கல்லாத
கல்வியின் ஆழம்
அம்மா சொன்ன
கதைகளில் வாழ்ந்து
இதயத்தில்
ஆயிரம் பாடங்கள்
கற்பித்த ஞாபகம்.

அன்பும் பண்பும்
சில நல்லவர்
பேசிய பேச்சில்
செய்த செயலில்
கற்ற ஞாபகம்...

வளர்ந்த காலங்கள்
வாலிபப் பருவத்தில்
காதலின் அறிமுகம்
கண்களின் சக்தியை
கண்ட ஞாபகம்.

அதுவரை கொண்ட
ஏக்கங்கள் யாவினும்
காதலின் ஏக்கம்....
முதன்முதல் நானே
ரசித்த உணர்வாய்...

கவிதையாய் பிறந்த
உயிரின் ஊற்றாய்
கனவின் லயிப்பில்
கண்ட உலகாய்
காதல் ஞாபகம்.

காதலும் யதார்த்தமும்
நடத்திய போரில்
வீழ்ச்சியா வெற்றியா
என்றறியாமல்
எல்லாம் முரணாய்
வாழ்வின் பாதைகள்
பிரிந்த ஞாபகம்...

வாழ்வின் ஆயிரம்
பரிமாணங்கள்...
யாவும்
ஒன்றாய் பரிமளிக்கும்
இல்லற வாயிலை
மணையாள் கைகளில்
தொட்ட ஞாபகம்....

உறவுகள் என்று
இருந்தவை யாவும்
ஒவ்வொன்றாய்ப்
பலம் இழந்த ஞாபகம்.

அன்பின் ஆழம்
அறியா வலியுடன்
வரையரை வாழ்வின்
வலிகள் ஞாபகம்

சிற்றீசல் பயணத்தின்
நேற்றின்
இனிய நினைவுகள்...
நெஞ்சின் காயம்
ஆறிட இட்ட
மருந்தாய் ஞாபகம்...

ஓடும் சமயம்...
வண்ணம் மாற்றும்
தன்னை மறக்கும்
இதயம் ஞாபகம்...

போகப் போக
மாறும் மாற்றங்கள்..
என்னைத் தேடி
நாளும் ஓட்டங்கள்....

போகும் வழியோ
வரும் வழியோ
எங்கோ
என்னை மறந்த ஞாபகம்

முகில்

Saturday, July 10, 2010

மரம்....


அழகாய்,
பசுமை பூக்க
உயர்ந்திருந்த
மரத்தின் அன்பு

கேட்காமல் கொடுத்த
நிழல்.
காற்று.
அழகு....

அதன் பூக்கள்
வீழ்ந்த
அழகு நிழலில்
அமர்ந்த
என் காதுகளில்...
அது
தனக்குள் அழுத குரல்...

அழுகையின் வேதனை
என் மனம் பிழிய,
கேட்ட காரணத்திற்கு
மரமளித்த பதில்...

என் மனம்
என் கண்கள்
என் கண்ணீர்...

அறிவதால்
உன்னால்
உதவ இயலாது என்றது...

சொல்வதால்
உன் பாரம்
குறையலாமே என்றேன்.

சில மொழிகள்
சொல்வதல்ல என்றது.

அனுபவத்தின்
கேள்விகள்
தானே விடைகளாகும்
என்றது....

நான் பாரம்
வேண்டித்தான்
அழுகிறேன்..

என் பூக்கள்
காய்க்காமல்
வீழ்கின்றன

என் வாழ்க்கை
பலனடையவில்லை

என் குரல்
எனக்கே
கேட்காத போது

உன் காதுகளில்
எப்படி?
என்றது....

அனுபவம் விடையாகும்
என்று சொன்ன
தத்துவமே என்றேன்

என் மனம்
என் செவிகள்
என் உணர்வுகள்

பூக்கள் உதிர்வதால்
வருந்தாதே
புலரும் காலை
பூவாகும்
இன்னோரு நாள்
காயாகும்...
கனியாகும்.

இன்னொரு செடியாய்
இன்னொரு மரமாய்

உன் ஈகை
உலகிற்கு வரமாகும்

என் வார்ததைகள்
எதிரோலிக்க...

வானிலிருந்து
வீழ்ந்த நீர்த்துளி...
மரத்தின் மகிழ்வு
போல்

என் பயணத்திற்கு
வாழ்த்துச் சொல்ல...

கண்கள் திறந்தேன்

ஆம்...
வாழ்க்கை என்ற
கனவினில்
கண்கள் திறந்தேன்!


:) முகில்

Tuesday, July 6, 2010

காகிதக் கப்பல்


கணக்குப் பார்க்காமல்
கழியும்....

மனதின் வினாடிகள்
எங்கெங்கோ திரியும்...

ஆசையும்
எதிர்பார்ப்பும்
ஏணி போட்டு
வானம் தொட முயற்சிக்கும்...

கற்பனைகள்
கனவுகள்
காலத்தின் காலடிகளாய்
சுவடில்லாமல் பறக்கும்

நம் வாழ்வின்
வினாடிகள்
நழுவும் மீன் போல்

இமைகளின் அமைதியில்
விழிக்கும் வரை
இறந்தகாலமாய்...

நாளை வரும் வரை
நாம் எங்கிருப்போம்?

இன்றின் நிழல்
அமைதியிழந்து
எங்கு ஓடுகிறது?

வாழ்வின் பரிமாணம்...
ஒரு வாளித் தண்ணீரில்
மறுபடி மறுபடி
சுற்றும்,
நிற்கும்.
மக்கிப் போய்....
உருக்குலையும்
காகிதக் கப்பல் போல்....


:- முகில்