Thursday, October 21, 2010

கோட்பாடு...

இரவின் நீண்ட தூரம் போல்
என்னைத் தேடிய பயணம்...

இதயத்தில் சுவர்களில்லா
பரிதவிப்பு....

என்னை மூடிக் கொள்ள
இருளே சுவரானது...

சொல்லாத வார்த்தைகள்
இருளில் எழுதிய சுவடியாய்
பெயரில்லாமல்
மறையும் மறையானது...

இருளைத் திறந்து
பார்க்கும் விழிகள்
இறைவனுக்கு உண்டு

இறைவனைப் பார்க்கும்
விழிகள் இருளில் உண்டு!

பாதையில்லாமல்
செல்லும் பயணத்தில்
ஒலித்த வேதம் போல்

என் சிதிலங்களில்
என்னுள்
என்
எண்ணக் கோட்பாடு

என் இருளறையில்
இறையருள்....

என் மந்திரங்கள்
என்னோடு!

இதுவே
என் கோயில்
கோட்பாடு...

Wednesday, October 13, 2010

கண் விழித்து ஒரு தவம்...

ஒவ்வொரு வாழ்வும்
ஒரு தவம்....

இதயம் என்ற
சிறு பேழையில்
இடுக்குகள் இல்லாத
சாலைகளில்
மோதித் திரளும்
எண்ணங்களின்
மூர்ச்சைகளில்
உள்ளும் வெளியும்
நடத்தும் ஒரு தவம்...

என்னைக் கேளாமல்
எங்கெங்கோ
பவணி செல்லும்...
எண்ணத்தின் இறக்கைகளில்
என் இதயம்!

ஒரு நொடி அன்பு,
ஒரு நொடி பண்பு
ஒரு நொடி சினம்
ஒரு நொடி கவலை
ஒரு நொடி சிரிப்பு
ஒரு நொடி மகிழ்ச்சி
மறு நொடி விரக்தி
என அன்றாடம்...
பல அவதாரங்கள்....

என் சுதந்திரத்தின்
சுய ரூபங்களில்
முகமூடி அணிந்து
யாருமறியா
துவாரங்களின்
வழியே
ஒழுகிக் கொண்டிருக்கும்
மணித்துளிகளின்
தசாவதாரங்கள்

அர்த்தங்கள் புரிந்தும்
அர்த்தங்கள் தேடியலையும்
அர்த்தமில்லாத உருக்களில்
என் வாழ்க்கையும்
உன் வாழ்க்கையுமே
அன்றாடம்
கண் விழித்துச்
செய்யும்
ஒரு தவம்....

Friday, October 8, 2010

வானம்

என் இமைகளுக்குள்
கண்ட வானம்
எனதருகே....

எனைச்சுற்றி
ஒரு சோலை,
என் வானில்
சில பறவைகள்...
சுற்றிச் சுற்றி

நான்
ஒரு பூமியா?
இல்லை வானமா?

என் நினவுகள்
எனையறியாமல்
ஜாலம் செய்ய

விளைவுகளாய்
விண்மீன்கள்

விதிகளில்லாமல்
விஸ்தாரமாய்

மூடிய வானமாய்
வெளிச்சம் தேடி....
செய்த தவம்

என் வாழ்க்கையின்
சுவர்களில்...

என்னையறியாமல்
விளம்பரம் செய்திருந்தது

என் வானம் எங்கே?
என்று....

கண்ணுக்கெட்டிய
தூரம் வரை
என் இமைகள்...
என்னை மறைத்தது...
என்னை மறித்தது!

Sunday, October 3, 2010

வாசகன்...

ஒரு புத்தகம்...

வாசிக்க முயன்றேன்
அர்த்தம் புரியவில்லை

யாரோ எழுதிய எழுத்துக்கள்
என்று விட்டுவிட
முடியவில்லை

முகவுரை
பொருளுரை
முடிவுரை
இல்லாமல்...

இந்தப் புத்தகம்....
இன்னும் திறந்திருக்க

முயன்ற பொழுதுகளில்
பதித்த முத்திரை
கிழிந்த பக்கங்களாய்...

இரவும் பகலும்
தெரியாத எழுத்துக்களில்

ஒன்றும் புரியாமல்....

என் புத்தகம்...
நானே வாசகன்!