Thursday, February 17, 2011

நான் என்ற குறும்படம்....

கேள்வி போல்
வளைந்த வாழ்க்கை...
பதில் தெரியாமல்!

எண்ணும் எழுத்தும்
கண்ணை மறைத்தன.

மனித ஜீவியாய்
ஒரு மாயம்....

என் சித்திரம் சிரித்தது.
கண்ணாடியாய்
என்னையே
எதிரில் கண்டேன்.

என்றோ சொன்ன
எதிர்கால வாக்காய்
என் சோதிடத்தை
எழுதிய என்னை

வெற்றிடம் நிரப்பிய
காற்றாய்
கிரகித்தேன்.

முக்காலமும்
உணர்ந்தேன்...
என் மூச்சின்
முகவரியில்.

நாடகங்கள் மேடையில்
மட்டுமல்ல
ஒவ்வொரு
நொடியும் நடிக்கும்
நான்

ஒத்திகை இல்லாமல்
ஒரு உலகம் படைத்தேன்

என் வாழ்க்கை
என்ற குறும்படம்
யாரும் காணாத
படச்சுருளாய்


கல்லறைப் பெட்டியில்...

Saturday, February 12, 2011

விழித்த போது விடியல்...

இரவு நேரம்...
வெளியே வீசிய பனிமழை...
வீட்டிற்குள் வீசிய அமைதி...
ஓடிக் கொண்டிருந்த டீவீ....
அலறித் தவித்த
தொலைபேசி...
முகம் பார்த்த உறவுகள்
முனகிய உயிர்...

என் மாலை நேரம்
ஏனோதானோ என்று...

ஒரு உலக நியதியில்
அன்றாடமானது.

எதிரே தெரிந்த
உருவங்கள்
கண்கள் பார்த்த எடைகளில்
வாழ்க்கையானது.

இங்கிருந்த இதயம்
எங்கோ நின்றிருக்க
கனவும் நிஜமும்
வெவ்வேறு பரிமாணங்களாய்

ஒவ்வொரு திசைகளில்
ஓடிய நானும்
ஒடாத நானுமாய்...

தத்துவம் மட்டுமே வாழ்க்கையல்ல!

கண்கள் திறந்தேன்.
விழித்த போது விடியல்!Sunday, January 30, 2011

ஒரு எண்ணம்... முயற்சி... இறையுணர்வு...

வருவது எங்கே என்றறியோம்
வந்தபின் உலகம் நாமறிவோம்
போவது எங்கே என்றறிவோம்
போகும் தருணம் நாமறியோம்.

உயிரின் பலபெயர் நாமறிவோம்
உயிரின் உருக்கள் நாமறிவோம்
உருவே இல்லா ஓருயிரின்
உன்னதம் எதுவென நாமறியோம்.

கடவுள் அன்பென கல்வி பண்பென
கற்றுத் தந்த உள்ளவியல்.
கற்றவை கற்றும் நின்றிடல் ஆகா
காரணம் தந்திடும் உலகவியல்

ஒவ்வொரு நொடியும் ஒரு பிறப்பெடுக்கும்
உள்ளச் சாயம் மாற்றுமியல்.
உலக வாழ்வு தருணச் சாய்வென
உரைக்கும் உண்மை இயல்பியல்.

தமக்கென வாழும் வாழ்வு சரியே
தமதென கொள்ளும் பாங்கும் சரியே
அளவினை மீறிடும் ஆசைகள் ஏனோ
அடக்கிட முடியா ஆவலியல்

சுவர்களுக் குள்ளே சுகமாய் உறங்கும்
சுயமும் சுற்றமும் சுயநலம் என்று
எண்ணம் உள்ள இதயங்க ளுண்டா?
சுவரே இல்லாச் சாலை யோரம்
சுருண்டு கிடக்கும் உயிர்களுக் கெல்லாம்
சுகங்கள் அறியா சோக வியல்.

உலகின் போக்கில் காணும் உண்மைகள்
உள்ளம் உருக்கும் நாணும் உண்மைகள்
எண்ணம் எழுதினேன் எதையோ இயம்பினேன்
என்று நிற்காமல் என் செய்வேன்?
இரையே இல்லா இச்சீர் மாற்ற
என்று நானும் நன் செய்வேன்?
இன்று கண்கள் சிந்திய கண்ணீர்
இதயம் உருகிட முயல்கின்றேன்
இனிவரும் நாட்களில்
இவர் நிலை மாற்ற
இறையைக் கேட்டேன்- பதிலில்லை
இயல்பைக் கேட்டேன்- இயங்கினேன்...

என்போல் ஒவ்வொரு உள்ளம் தேடி
எடுத்த காரியம் உயர் வடைய
எழுந்தேன்...நடந்தேன்...
எண்ணம் தெளிந்த உணர்வுடனே
என்னுள் கண்டேன் இறைவனியல்.

Sunday, January 2, 2011

நானாய்...

வரையரை இல்லாத
வானத்தில்
வரைந்த
கற்பனை ஓவியம் போல்....

எண்ணக் கோட்டைகளின்
சாளரங்களில்
என் வித்யா சரணங்கள்

உள்ளும் வெளியும்
ஒன்றுமில்லாமல்
உரைந்த
மணித்துளிகளில்

கிழிந்த குடையாய்
என் இதயம்....

ஒழுகிய நிதர்சனம்
ஒட்டாமல் நான்

கற்பனையா?
கனவா?
கட்டாந்தரையா?

என் சடலத்தின் மேல்
விளைந்த புல்லை
எமனின் வாகனம் புசித்தது.

எல்லாம் நானே....
என் முகவரி தேடி
யாரும் அலையவில்லை

என்னைத் தேடிய
பொழுதுகளில்...
நானாய்...

எனக்கு நானே எமனாய்....

என் சரித்திரம்
சரிந்தது.