Tuesday, December 29, 2009

வழித்துணை...

அன்பெனும் உணர்வு அகம் பெருக்கெடுக்க
அறிவும் அகந்தையும் அடுத்தது மடுக்க
பண்புகள் நல்லவை நலம் உளம்சேர்க்க
வின்எலை அளவிலா வித்தகம் கற்றேன்

மட்புகழ் பொட்புகழ் மதிசெரி கற்ப்புகழ்
மனிதச் சிறுவிலே மாறிடும் உறுப்புகள்
மக்கிடும் சிக்கலில் மிக்கொரு நித்தனாய்
மாய்த்தனை சிற்ப்புகழ் மாக்களில் எத்தனாய்
மிக்கிய சேர்வினை மீதலில் வாழ்ந்தவா
மேன்மைசேர் திருவினை அன்பிலே உறைந்தவா!

எப்பெரு சக்தியின் முப்பரிமாணமாய்
எத்தகு நிலையும் அன்பினில் உய்த்திட
வித்தகு செவ்வினை சீரிய உளமே
வீசு நல் வீரியம் அன்பே!

சொக்கிடும் சுகந்தமே சோர்வறு வசந்தமே
சூழப் பறந்திடும் சுதந்திரப் புறாவே
வாழ நல்வழி மேல்நின்று சொன்ன
வழித்துணை விழித்துணை யாவுமாய் உற்ற
வாஞ்சையும் அன்பும் வழித்தடம் ஆகுமே....

Thursday, December 17, 2009

தேடல்...

அங்கும் இங்குமாய் அலைந்த பொழுதுகள்
ஆசை கனவுகள்...
மோகம் கொண்ட வாழ்க்கை கதையில்
மூடிய பக்கங்கள்...

வருவது என்ன அடுத்து என்றால்
வெள்ளைக் காகிதங்கள்
வாழ்க்கை வாசல் திறந்து கிடக்கும்
எழுதாச் சரித்திரங்கள்...

உள்ளம் சொல்லும் உணர்வுகள் யாவும்
நன்மை பயக்குமா?
நல் சொல்லின் வழிதான் வாழ்வில்
செல்தல் உண்மை ஆகுமா?

உன்னை அறிய முயன்ற தருணம்
உன்னில் இருக்குமா? இல்லை
ஓட்டை விழுந்த பாத்திரம் போலே
ஒழுகி சறுக்குமா?

நீயும் நானும் போகும் இடத்தை
மாற்றிட இயலுமா?
பயணம் ஒன்று பாதைகள் வேறு
அறிந்திடல் கடினமா?

மானுட வாழ்க்கை வாழ்தலில் என்ன
மகத்துவம் கேட்டவரை
சோதனை வாழ்க்கை சாதனை என்று
சொல்லிடவே தகும் அல்லால்
வெறும் போதனை மட்டும் மனிதனின் வாழ்வை
மாற்றிட இயலுமா?

தோல்வியும் வெற்றியும் ஓவ்வொரு பக்கம்
அர்த்தம் ஒன்றுதான்
தோற்றவன் கற்றலும் வென்றவன் கற்றலும்
வாழ்க்கையின் தேடல்தான்

உயரே உயரே செல்லும் ஆசைகள்
உனக்கு உனக்கு என்பது எல்லாம்
பெயரே இல்லாக் கல்லறை ஒன்றில்
உறைந்த உணர்வுகள்...

வாழ்க்கை ஒருமுறை உனக்குக் கிடைத்த பலனே
வாழ்ந்து செல்லடா நண்பா
வன்முறை குரோதம் வஞ்சகம் விட்டு
வாழப் பாரடா....

Monday, December 14, 2009

காற்று...

நீ
எங்கிருந்து வந்தாய்?
என் மூச்சாகினாய்?

தென்றல் சுகம் என்பது
உன்னால்தான் தெரியும்...
சுமைகளும் வெறும் பஞ்சாகும்
உன்னால்தான் தெரியும்...

இருண்டு கவிழ்ந்திருந்தேன்
நீ விளக்கானாய்..
இல்லாத எல்லைகளில்
ஒரு இலக்கானாய்...

தூரங்கள் அருகினிலே
நான் உன் அரவணைப்பில்
கண்ணயர்ந்தேன்....

கனவுகள் கலையும்
என்ற உண்மை நீயானாய்...

வலிகளை சுமந்தவனாய்
வழிதனை மறந்து நின்றேன்...
நினைவினில் கலந்த உன்னை
நீக்கிடத்தான் இயலுமோடி?

என்னை கேட்கிறேன்
என்னிடம் சொல்கிறேன்...
என்னில் எல்லாமும்
நீயானாய்....

கண்ணில் வழிகின்ற
கண்ணீர் கானல் இல்லை...
உன்னை சுமந்த உள்ளம்
சுரந்த வேர்வையடி...

எங்கிருந்தோ வந்தாய்
எனைத் திருடிச் சென்றாய்...
காற்றின் விசையினிலே
பரந்த சிறுதுரும்பாய்
காணாமல் போனேனே...
என் கண்ணில் விழுந்தேனே

உன்னை முகர்ந்ததனால்...
என்னை மறந்தேனே....
எங்கிருந்து வந்தாய்
நீ என் மூச்சாகினாய்?

Sunday, December 13, 2009

கட உள் ...

பல கோடி உயிர்கள்....
பரந்த பூமி
பேசியும் பேசாமலும்
ஜீவராசிகள்!


மனிதன் மட்டும்
மகத்துவம் பெற்றான்
மனிதனின் மத்தியில்.


புனிதம் என்ற பெயரில்
வரைந்த வரைகோடு.
புண்ணியம் என்ற பெயரில்
புணைந்த பூச்சுக்கள்...


புற்கள்,
செடிகள்,
கொடிகள்
மரங்கள்
விலங்குகள் என்றும்
அணுவினும் சிறிய
நுண்ணுயிரிகள் என்றும்


படைப்பின் சிறப்பு,
உன்னதம் என்று
இருப்பதை அறிந்திட
எடுத்த முயற்சியில்
அறிந்ததைச் சொல்லி
தெரிந்தவன் ஞானியா?



இகம் பரம் என்று
தம்மை அறிந்திட
தவம் பல புரிந்து
காவியில் காலம்
கழிப்பவன் ஞானியா?


படைப்பின் வட்டத்தில்
பயிற்சி செய்திடும்
பண்பாடு கொண்டு
அன்றாடம் பார்க்கும்
அவனவன் ஞானியா?

ஒருமுறை கொடுத்த
ஓருயிர் கணக்கில்
சுகம்பல வேண்டும்
சுதந்திரன் ஞானியா?

வினோத உலகின்
விந்தைகள் பார்த்து
வியக்கா உள்ளம்
வித்தகன் ஞானியா?

வந்தவன் போகிறான்
வெந்தவன் ஆகிறான்
உற்றவை கற்றவை
உதறிச் செல்கிறான்

வரவு செலவு
செய்பவன் யாரோ?
வாழ்க்கைக் கணக்கை
புரிந்தவன் யாரோ?
தெரிந்தும் பயணம்
புரிந்தும் இன்னும்
கொலைகளும் கொள்ளையும்
புரிவதும் ஏனோ?

சொத்தும் சுகமும்
மனித வாழ்க்கையா?
அன்பும் உறவும்
மனித வாழ்க்கையா?
ஒருவனை கொன்று
ஒருவன் வாழ்ந்திட
செய்யும் கொலைகள்
மனித வாழ்க்கையா?

மனிதன் என்பது
விலங்குகள் போலே
மனிதன் தனக்கே
வைத்த பெயர்...

ஆயிரம் ஞானியர்
இருந்தும் உலகில்
போரும் பகையும்
வளர்வது ஏன்?

அரசியல் பாசறை
சூசகம் வளர்ச்சி
ஆயிரம் வார்த்தைகள்
வளர்ப்பது ஏன்?

பொருளாதாரம் என்ற பெயரினை
மனிதன் மாற்றிட வேண்டும்
மனிதாதாரம் என்ன என்பதை
மனிதன் உணர்ந்திட வேண்டும்

விலங்குகள் போலே வாழும் மனிதன்
வீழ்ந்திடத்தானே வேண்டும்...
விதிகளை மாற்றி சதிகளை விட்டு
புதியவனாகிடல் வேண்டும்...

இறைவன் உள்ளான் என்று சொல்லி
தர்மம் என்றும் புண்ணியம் என்றும்
பொழுதை போக்கும் ஒரு கூட்டம்

நாட்டை காக்கிறோம் உலகம் காக்கிறோம்
என்று உளறி போரில் மாய்க்கும்
இன்னொரு கூட்டம்

ஒருவன் கண்டது ஒருவன் கொண்டது
சுயநல வாழ்க்கை விலங்கினச் சேர்கை
இயற்க்கை விதிகள் கலாச்சாரம்
மனித விதிகளும் மாயைப் போர்வையும்
யார் செய்தார்?
இல்லை எது செய்தது?

காணாக் கடவுளைக் கேட்கின்றேன்...மனம்
திறந்து உனை தேடுகிறேன்..
மனிதம் என்றொரு வார்த்தை மட்டும்
மனிதம் ஆகிடல் ஆகாது

மனிதன் கடவுளின் மறுபுறம் என்றால்
கட உள் மனம் கொஞ்சம் மனிதா...
மறுபுறம் கடவுள் உள்ளார் -அவர்
கட உள் என்றே சொன்னார்....
கடவுள் கட உள்.....