Saturday, February 27, 2010

அவள் நான்!

கதை சொல்லிய வானம்
கற்பனைகளின் கருவறையாய்...
என் எண்ணக் குழந்தைகளை
ஈன்ற தாய் போல்....


விண்மீன் வித்தைகளில்
நிலவின் வெள்ளி இதழ் சிரிப்பில்
அண்ணாந்து பார்த்த என்னை
அயராமல் ஈர்த்தவள்...


இரவுகளின் மௌனத்தை
கிராமத்துக் காற்று முத்தமிட
தமக்கென்றே இரவு வருகிறது
என்று
உச்சஸ்தாயியில் கீச்சிடும் பூச்சிகளின்
காதல் கீதங்களுடன்


அணைத்தும் ஒருங்கிணைய
அது ஒரு லயிப்பாய்
என் இதயத்தில்
இசை பாடிய இளமையாகும்.


நான் எழுதாத பருவத்திலும்
இதயம் எழுதிய கவிதையாய்
இயற்கையின் வனப்பில்
என்னை இழந்த பொழுதுகள்...


கண்களின் முதல் சுவாசமாய்
அவள் அழகையே
முகர்ந்தேன்


அமுதின் இனிமை அறியாச்
சிசுவாய்
அவளையே பருகினேன்....


சோகங்கள் வரும் என்று
வாழ்வின் திருப்பங்கள் காத்திருக்க
என்னுடன் வந்த
சுகமாய் இருந்தாள். 


நான் போடாத பாதைகள்
எனை அழைத்த போது 
அறியாமல் திகைத்த என்னை
அரவணைத்து

இடர்களில் தடுமாறி
இன்னலில் அழுத போது
அறியாக் கரங்களால்
என் கண்ணீரை துடைத்தாள்


வாழ்வின் கண்ணிமைகள்
ஒரு முறை
திறந்து மூடும் பயணமாய்


பயணிக்கும் என் பாதையில்
அவளே நடை பயில்வித்தாள்
நடையாகினாள்...


வார்த்தைகள் தேடும்
வாக்கியத்தின்
நாக்காய்,
வாக்காய்
அர்த்தங்களாய்


என்னோடு....
அவள் நான்
இல்லாத பயணமா
என்று
சன்னலோரம் தனிமையில்...
அவளுடன்...



Tuesday, February 23, 2010

எல்லாம் விதி....

விதி விதியென்று
வையக மாந்தர் 
வாழ்வின் வழிதனில்
வாழும் பொழுதினில் 
விரக்தியில் புலம்பா 
வேளையும்  உண்டோ?


வியப்பில், அதிர்வில்
விடியாத் துண்பத்தில்
விதி வசமேன்றே  
வீழ்ந்து அழாத
உள்ளமும்  உண்டோ? 

பிறந்தது முதலே
பிரியா வார்த்தையாய்
உடன் வரும் விதியின்
விதிதான் என்ன?  
எது விதி என்றே
என் மனம் அலசிட
எத்தனை முயற்சி
எடுத்தும் அறியா
என் செயல் கூட
என் எதிர் நின்று
சிரிக்கும் விதியோ?


வேண்டாம் என்று நாம் 
ஒதுங்கிட முயல்கையில்
விரலைப் பிடித்து
விணையாய்   தொடரும் 
ஒட்டி உறவாடும்  
வேண்டா விருப்பின்
பெயர்தான் விதியோ?


காலையில் எழுந்ததும்
கண்களை மூடி
கடவுளை வேண்டி
காரியம் தொடங்கையில்
கடந்தது பூணை
காரியம் கெட்டதே
எனக் கண் மூடிக் 
கலங்குதல் விதியோ?   

குறிகள் பார்ப்பதும்
கண்டம் பார்ப்பதும்
குனியாத் தலையில் 
குட்டுப் படுவதும் 
கண்கள் பதியாப்
பாதையில் இடர்வதும்
குங்குமம் விழுவதும்
விதவையைக் காண்பதும்
பல்லியின் சொல்லில்
பலன்கள் பார்ப்பதும் 
அறிவியல் விதியோ?
அறியாமையின் விதியோ?

மனிதர் ஓர்குலம் 
மனங்கள் ஒன்றென 
மதியின் ஆய்வில்
மனிதன் செல்லா
மடமை விதியோ?

வண்ணத் தோல்கள்
வாய்க்கப் பெற்றோம் 
வண்ணப்  பிரிவினை
ஏய்க்கப் பெற்றோம்
சாதிகள் குலங்கள்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்  
வையம் பெற்றதும்
உலகம் மடமையில்
உழலும் விதியோ?

வேண்டிய விருப்பங்கள்
வேண்டா விழைவுகள்
நடப்பின் தவறுகள் 
எண்ணாச் சிறுமை 
நமக்குள் வந்த 
நிகழ்வும் விதியோ?  

நல்லது நடப்பின்
மகிழ்வது நடப்பு
நல்லது நடந்ததை
மறப்பதும் நடப்பு....
இது நல்விதிஎன
இதயம் சொல்லாமல்
இழப்பை மட்டும்
இழிவாய் சொல்லும்
இதுதான் மாந்தர்
இயல்பு விதியோ?

மனிதனின் விதியை
மனிதன் அறிந்திட
மறுக்கும் கிறுக்கு
மடமை விதியோ?

விதியைத் தேடி
வீதி வீதியாய்  
விதி விதியென்று 
விதியாய் அலைந்தும் 
விதியின் வினோதம் 
அறிகிலேன் நண்பா 
விதியின் அர்த்தம் 
சொல்வாயோ நண்பா?  

Friday, February 19, 2010

கவி தை நின் நினைவாய்...

கவி தை கேட்டாள்.
கவிதை ஒன்று.
கவியான அவளே
கவி கேட்ட பொது
கவிதைக்கு  வெட்கம்
கண்மூடிக் கொண்டது!


காணாத விழிகளிலே
கற்பனையாய் ஒளிரும்
கவி சொன்னாள்; மின்னல்
கவி செய்த பார்வையென
கவின் பாடும் பாசக்   
கவிமொழியும் அவளானாள்


கவிழ் வானச் சூரியனின் 
கட்டழகுக்  கலை போலே
கவிதேடும் இதயத்தில்
கண்முன்னே ஓவியமாய்
கவி சொல்வாய் என்றவளே  
கவித் தருவாய் நின்றாள்  
கவிச் சொல்லாய் நெஞ்சினுள்ளே 
கவி பொழிந் தாள்; வென்றாள்


மதியானாள்; மதிஎண்ணும் 
நினைவுகளின் நதியானாள். 
புலர்கின்ற பொழுதெல்லாம் 
புதிதான ஒளியானாள்....   
காலங்கள் கொண்டுவரும்
காணாச் சுழற்சியிலே
வருவதும் போவதும்
காலவிதி யெனச்சொன்னால்
காலத்தால் மாறாத
கருவாக நிற்கும்
கவி அன்புப் பவித்திரமாய்
கவியோடு வாழ்வாள்
கவியன்று எனையே 
கவி பாடக் கேட்டாள்
கவி சொல்லும்   கவியாய்
கவித்துவமப் பவியாய்
கவியானாள் ....
என் கவியானாள்.... 

Wednesday, February 17, 2010

நீ....

மனம் என்ற கோயிலின்
மறைந்த சுவர்களிலே
எழுதிய மந்திரம் நீ...

நான் சொல்லாமல்
தானே எழுதிய
அகத்தின் அர்த்தமாய்

தானே முடுக்கி
தானே இயங்கும்
தான்தோன்றியாய்
உளறும் வார்த்தைகளில்
தாரக மந்திரமாய்
நீ....

ஒரு உயிரின்
இயக்கமாய்
இதயம் துடிக்க
இதயத்தின் உயிராய் நீ....

மாயம் எண்ணி
வியக்கும் சிறுபிள்ளை போல்
சுற்றிச் சுற்றி
உன்னைத் தேடும்
ஓயாத ஓட்டத்தின்
காலடித் தடங்களும் நீ....

காதல் இதயத்தின்
கண்களானாய்!
இமைகளின் இருளில்
இதயத் துடிப்பில்
அருகில் எனக்குள்
ஆனாலும்
கானல் போல் நீ....

இருந்தாலும் மூழ்கிவிட்டேன்.
சொல்லாத சுகமாக
எனக்குள்
கடல் போல் நீ.....

என் பயணத்தின்
ஒவ்வொரு நொடியும்
நீ.....

காதலின் தூரமும் நீ.
காதலின் அருகும் நீ.
அணைத்தும்
நீ...நீ...நீ.....

Saturday, February 13, 2010

காதல்... ஃப்ளாஷ் பேக்


காதலர் தினத்திற்கு
ஒரு கவிதை.
கங்கணம் கட்டிய உள்ளம்
காலங்கள் பல விட்டு
பின் ஓடி
காதல் நிறைந்திருக்கும்
மௌனக் கூடத்தில்
ஒரு ஃப்ளாஷ் பேக்... போல்

பார்வைகளின் சிறு ஸ்பரிசத்தில்
பறந்த பொழுதுகளின் முகவுரையில்
தவம் கிடந்த நெஞ்சினிலே
காவியங்கள் எழுதிய
காதல் உணர்வுகள்...

எனை நானே புரட்டிய போது...
எத்தனை வயது என்பது இல்லை.
காதல் ஒவ்வொரு நொடியும்
எனை விட்டதில்லை.

கேள்விகள் இல்லாத பவித்திரமாய்
கேட்டுப் பெறாத தானமாய்
காதல் செய்த யாகம்...
உள்ளமே அதில் தானம்...

அடுத்தது எதுவும் எண்ணாமல்
அறிவின் நிழலை அண்டாமல்
அவள் நிறைந்த இதயத்தில்
அன்பே பொழிந்தது பன்னீராய்....
அர்த்தங்கள் கேளாமல்
அழுத விழிகளில்
அன்பே வழிந்தது கண்ணீராய்...

உணர்வுகளில் உன்னதமாய்
ஒரு உண்மையின் தரிசனமாய்
ஒவ்வொரு இதயமும்
லயிக்கும்...
தன்னை மறக்கும் தருணம்....

காதல் தரும் சுகம்
காதல் மட்டுமே தரும்...

யோகிகள் போல்,
ஞானிகள் போல்,
எங்கோ தேடாமல்....
இதயத்தில் குடியிருந்த
பரம்பொருளாய்,
யதார்த்தமாய்
உயிரில் கலந்து
உருவம் தந்த காதல்...

காதல் கொண்ட இதயம்
கொண்டிருந்தேன்
என்ற ஒரு உணர்வே
மூடிய பக்கங்களில்
மூச்சின் முகவரிகளாய்
எஞ்சிய வாழ்வின்
எழுதாச் சரித்திரமாய்...

என் காவிய வாழ்வின்
காதல் ரேகைகளில்
கால்கள் சென்றன...
காலம் செல்கின்றது!

காதல் இல்லாத தினமில்லை
காதல் இல்லாமல் நினைவில்லை....
காதலில்லாமல் நானில்லை.