Friday, March 26, 2010

வாழ்க்கை என்றொரு போதிமரம்....











ஊழிக்காற்று வீசிய வேகம்...
உஷ்ணத்தின் உச்சகட்டம்
நெகிழ்ந்து போன சமயம்....
கனவுலகில் விழித்து...
உணர்வுகளின் கட்டைப் பஞ்சாயத்து!

யார்?

யார் நான்?
என்று மனம்
கண்ணாடி பார்த்து
கேட்டது.

பிம்பங்கள் ஒன்றொன்றாய்
வேஷங்கள் காட்ட
மனம் சிரித்தது.

நான் யாரென்றால்
நாலுவிதமாய்த்தான் இருக்கும்...
என்ன சிரிப்பு? எக்காளம்?

மனம் தனக்குள்ளே
முனுமுனுத்தது.

மனதின் மனம்
பிம்பங்களாய்...
பிம்பங்களின் பிதற்றலில்
மனம் மயங்கிக் கிரங்கியது....

என்னைத் தேடிய மனமும்
மனதைத் தேடிய நானும்
பிம்பங்களில்
அனாதைகளாய் பிரிந்த போது

யாரோ இட்ட பிச்சையாய்
நிஜமும் மாயையும்
நிர்வாணமாய்....

வாழ்வு என்ற பெயரில்
பலவந்தமாய்
என்னை ஒருபுறம்
மனதை ஒரு புறம்
பலாத்காரம் செய்தது....

நிமிடங்களை
சுருட்டி கட்டிய போது
மாயங்களின்
கிரகத்தில் பயணித்தேன்...

இணைந்த உடல்களின்
இன்பத்தில் உருவானேன்...
உள்ளங்கள் ஒன்றாக
நானே உயிரானேன்.

உலகிற்கு அறிமுகமாய்
இன்னொரு ஜீவனாய்
ஒருவழிப் பாதையில்
நானும் நடப்பானேன்.

தேவைகள், தேடல்கள்
வயிறும் காமமும்
ஆசைகள் அடைதல்
அன்றும் இன்றும்
வழிவழி மரபுகள்.

நானும் மனமும்
என்று சேர்வோம்?
வேகமும் அயர்வும்
கோபமும் தாபமும்
அடையும் வேட்கையும்
கொலையும் கொள்ளையும்
எல்லாம் எதற்கு?

எங்கோ எப்போதோ
ஏனோ பிரிந்த
மனதும்
நானும்,

கனவுலகின் கதவிடுக்கில்
காற்றாய்ப் பயணித்தோம்.

வாழ்க்கை கனவா என்று
கேட்கவும் விரும்பாமல்
வழிகளில் ஓடும்
விழிகள் இல்லாமல்
பயனித்தோம்.

அனாதைகளாய்

வாழ்க்கை என்னும் போதிமரத்தினடியில்
காணாத நெருக்கங்களில் 
வாடிக்கைப் பிறவிகளாய்....

என்றாவது ஒரு நொடி
என் மனமும் நானும்
இணைவோமா?

Saturday, March 13, 2010

உலகம் ...மனிதம்...


ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகள் இதுவரை
இறைவனைக் கண்டதுண்டோ?

பல நூறு மதங்கள்
மண்ணில்
இறைவன் பெயரில் நன்றோ?

இயற்கையின் படைப்பில்
உயிர்கள் என்றால்
தெய்வம் இயற்கை ஆகாதோ

சக்தியின் ரூபம் எதிலோ?
சகலமும் படைத்தது எதுவோ?
கேள்விகள் கேட்டு
ஞானம் கற்கும்
கடவுளின் ரூபம் எதுவோ?

மனிதனின் மனம்
மதமெனும் குணம்
மதத்தினில் சிறுத்தது நன்றோ?

உயிர்களின் திறம்
மனித உருவினில்
மடமை கொள்வதும் நன்றோ?

சாதிகள் வைத்தான்
சடங்குகள் வைத்தான் - தோல்
வண்ணப் பிரிவினை
நாதியில் வைத்தான்...
ஆதியில் அம்மணம்
அந்தமும் அம்மணம்
மீதியில் மூழ்கிடும்
மூர்க்கமும் நன்றோ?

மதத்தின் பெயரில்
மனிதனை மனிதன்
மாய்ப்பதும் ஏய்ப்பதும் நன்றோ?

இன்னொன்றைக் கொன்று
ஒன்று வாழும்
இயற்கையின் விதியில்
மிருகம் வாழும்

மிருக மரபிலும்
மிகுந்த கேவலம்
தனது இனத்தை
தானே கொல்லும்
மனித வெறியும் நன்றோ?

அரசியல் கொள்ளையர்
ஆளும் சூழ்ச்சியில்
அறியா பேதை மக்கள்

கற்றும் மறக்கும்
கயவர் போலே
கற்றவருள்ளும் மூடர்...

பட்டினி பசியென
உண்ண உணவிலை
பஞ்சம் கொல்லும்
ஒரு பக்கம்

உண்டது மிஞ்சி
உணவை எறியும்
உலகின்
இன்னொரு பக்கம்

உலகம் முழுதும்
ஒரு குடும்பம்
உலகின் சொத்து
அனைவருக்கும்
என்று பகிர்தல்
மனிதம்....

ஒருவன் தலைமுறை
சிறந்து வாழ
ஒருவன் உழைக்கும்
திறன் நன்று....

தந்தை உழைக்க
தாயும் உழைக்க
மைந்தர் மகிழும்
தண்மை போல்

உலகின் மூலையில்
யார் உழைத்தாலும்
ஏங்கும் இன்னொரு
பட்டினி சகோதரன்
நோயில் சகோதரி
இவர்களுக்கு ஈதல்
இன்பம் சேர்க்கும் மனிதம்.

மதத்தில் திமிரும்
அகங்காரம் நீ...
நீ என்ற உன்னை
மதம் என்ற பண்பை
குறைத்தே மதத்தில்
'னி' சேர்க்க மனிதம்

அகங்காரம் தரும்
சுயநலம் விட்டு
அன்பு நீ சேர்க்கலாம்
மனிதப் பண்பு நீ சேர்க்கலாம்

நாளைய உலகம் அதற்க்கு
நல் மனிதர்கள் வாழும்
மனிதம் என்றே பெயரிடலாம்
உலகம் மனிதம் என்றே மாறிடலாம்..

Friday, March 12, 2010

நான் வானம்...நீ பறவை

என் மௌனத்தின்
உதிரல்களில்
விளைந்த பூக்களாய்
வானம் பார்த்தாய்...

உன் பார்வை
என் வானத்தில்
வானவில்லின்
வண்ணங்கள் தீட்ட ...

நினைவுச் சூரியனின்
புரவிகளாய்
என் தேரிழுத்தாய்

பலகோடிக் கவிதைகளின்
ஸ்பரிசத்தில்
உனை எழுதாத எழுத்தில்லை.
மொழியில்லை!

கண்கள் பாராத
நுண்ணுயிராய்
என் மண்டலத்தில்
முற்றுகை இட்டாய்.

நினைவுகள் அடிமையாய்...
சுவாசத்தில் நீயில்லா
சுகம் பிடிக்காமல்
என் சுதந்திரம்
உன்னில் குடி கொண்டது!

யுகங்கள் ஓடியும்
சகங்கள் மாறியும்
நீ மட்டும்
வாடாத வாசமாய்
வாழ்கிறாய் எப்படி!

என் ஈசல் வாழ்வினில்
உன் வசப் பட்டேன்
என்ற ஒரு நினைவே
சாபல்யங்களாய்

மௌனத்தின் சலனங்களாய்
நீ சிறகடிக்கிறாய்...
என் வானம் உனக்காக
விரிந்து கிடக்கிறது!

Saturday, March 6, 2010

காதல்...


காதல்!

உயிரின் ஸ்வரம் மீட்டி
உணர்வின் இசையாய்

வாழ்க்கை வனத்தின்
வசந்த வனப்பாய்

சொல்லாமல் குடிபுகுந்த
சுயத்தின் சுகமாய்

அன்பாய் அகத்தில்
அறிந்திடும் அழகாய்

இலக்கியம் அறியாமல்

இதயம் எழுதும்
இனிய கவிதையாய்


உன்னால்....
காதல்!

நிழல் கூட வியந்தது 
வெளிச்சம் இல்லையென்றால்
உன்னைத் தொடர முடியாதென்று....
நானோ
இரவு பகல்
வெயில் மழை என்று
உன்னைத்  தொடராத
பொழுதுகளே இல்லை...

காதலின் வெளிச்சத்தில்
உன்னை என்
இதயத்தில் உயிராய் தொடர்கிறேன்...
சூரியன் வாராத  நாளுண்டு
சந்திரன் இல்லாத நாளுண்டு
உன்னை  எண்ணாமல்
நானுண்டோ?
நின் நினைவுகள் நீங்கிய
நொடியுண்டோ?

இச்சென்மம் விழி மூடும்
என் காதல் விழி திறக்கும்
மறைகின்ற நொடிதனிலும்
உன் நினைவில் உயிர் பெறுவேன் 
மறுபடியும் பிறப்பேன்
மறைவின்றி வாழ்வேன்

இப்பிறவி எனக்களித்த
இறைவனது அருள் போலே
காதலுனை எண்ணியே
காற்றினிலே கலப்பேன்....
என் வானின் திசை யாவும்
உன்னோடு பறப்பேன்...

Thursday, March 4, 2010

பயணம்...



யார் சொல்லித் தந்தது
இந்தப் பயணம்...

நியதிகளின் நேர்கோட்டில்
வளையும் பாதைகள்.

வளையாத உள்ளங்களின்
கண்ணாமூச்சி விளையாட்டு...
இமைக்கும் கணம் 
கலையும்  கனவுகள்

நேற்றும் இன்றும்
காற்றாய்க்  கரையும்!
நாளை என்னும்
தெரியா இலக்குகள்...
அறியாப் பாதையில் 
அனாதைப் பயணங்கள்...

பெயர்கள் வைத்து
பேச்சில் மட்டும்....
பாவ புண்ணியப் புதினங்கள்

நெருடும் உணர்வுகளின்
நிழல்களில் உறங்கும்
ஒட்டாத உறவுகள்
ஓடும் வாழ்க்கை

பயணம் தொடங்கி
செல்லும் வேகம்
எல்லாம் ...
முதல் தொடக்கம்
முடிவு அடக்கம்
தோற்றம் மறைவு
என்று,
கல் அறைக் 
கவிதையாய்
ஆத்மாவின் தேடல்....

யார் சொல்லித் தந்தது
இந்தப் பயணம்?