Sunday, May 31, 2015

பிம்பச் சுழற்சி

















எனக்குள்...
அருகில்....
இருந்தும்
தொலைவில்

ஒரு புறம் நான்
மறு புறமும் நான்

உணர்வுப்படி
ஒருவன்
ஒத்திகை பார்க்கும்
ஒருவன்

இயற்கையும்
செயற்கையுமாய்
நிகழ்காலங்கள்

இழந்துவிடும்
இறந்தகாலங்கள்
எதுவோ
எதற்கோ
எதிர்காலங்கள்

இதுதானோ
வாழ்வியல்
கோலங்கள்?

எனக்குள் ஒருவனும்
எதிரே ஒருவனும்
எதிரும் புதிருமாய்
எத்தனை வடிவங்கள்

எனது பார்வையில்
என்னைக் கண்டிட
எத்தனை முயற்சிகள்

என்னைக் காணுமுன்
என்னைத் தொலைக்கும்
எத்தனை சுழற்சிகள்!

 உயிரியல் புணர்ந்த
உயிரின் ரூபமாய்
உறவுகள்  கொடுத்த
அவளின் தானமாய்
வாழ்க்கை என்று
வந்ததொன்று
வாஞ்சை கொண்டு
வாழ்ந்ததின்று...

அனுபவித்தவன்
மனிதன்

முற்றும் துறந்தவன்
முனிவன்

தொடக்கமும்
முடிவுமாய்
ஆதியும்
அந்தமுமாய்
எனக்குள்
நானே
இறைவன்


பயணம் உண்டு
பயணியும் உண்டு
பாதைகள்
பல ஆயிரம் உண்டு


ஆனால்
தொடங்கியது
தொடர்ந்தது
முடிந்தது
எல்லாமே
பிம்பச் சுழற்சியில்
வெவ்வேறாய் தெரியும்
ஒரிடமே!


:-) முகில்
மே 31, 2015





Friday, May 15, 2015

வாட்ஸ் அப் (whatsapp) காதல்


ஒரு நாளில்
ஒரு முறையாவது
சொல்லவில்லை என்றால்
பழுதாகிவிடும் அளவு

எல்லா ஸ்மார்ட்
கைபேசிகளும்
அறிந்த
மூன்று வார்த்தைகள்
ஐ லவ் யூ


ஆயிரமாயிரம் சொற்கள்
பொதுவாய்ப் பகிர்ந்தாலும்
அந்தரங்க உணர்வுகள்
அவைகளை மீறும்

கணிக்க முடியாத அளவிற்கு
ஒன்றும் பூச்சியமும்
கலந்து  
காற்றில் பறந்து
கண்ணுக்குத் தெரியாத
பைனரி கடலில்
நீந்தும்
எத்தனையோ
மனங்கள்...

மின்னணுவியல் கூட
மறந்திருக்கும்
இந்த போன்களின்
கணினி மொழிக்கு
காதலே அது அறிந்த
புது மொழி

 காதலைச் சொல்ல
காலமெல்லாம் கடத்திய
காலங்கள் போய்

இன்று
நொடிக்கு
ஒரு லட்சம் முறை,
பல மில்லியன்
பலப் பல பில்லியன்
என்று
காதல் மொழி பேசும்
கைபேசிகள்

தெரிந்தவர்க்கும்
தெரியாதவர்க்கும்
அறிந்தவர்க்கும்
அறியாதவர்க்கும்

நவீனத் தூதுவனாய்
கைபேசிகள்
சொல்லும்
அடையாளமில்லாத
காதலின்
அடர்விலும்
வேகத்திலும்
பூமியின் சுற்றும்
வேகமாகிவிட்டது போலும்


பீப், டிடிங், கூகூ என்று
கைபேசிச்  சமிக்கைகள்
நாடி நரம்புகளில் 
ரத்த நாளங்களில் கலந்துவிட்ட
நவீனத்தின் கணங்கள்

சமிக்கைகள் சுமந்து
வாழும்
புது யுகத்தின்
மூச்சாய்

மனிதனின் மறைமுகம்
மனிதனின் புனிதம்
மனிதனின் மிருகம்
என்று
எல்லாச் சாயங்களையும்
எந்த வித
பாரபட்சமின்றி
பரபரப்பாய்
பிரசவம்
செய்யும்

முகநூல்
வைபர்
மற்றும்
வாட்ஸ் அப் காதல்


--- முகில்














Wednesday, May 13, 2015

ஒன்று - ஒன்று = 0



எந்திர வாழ்வு.
எதற்காகவோ
ஓடிக் கொண்டிருந்தேன்....
எதையோ
தேடிகொண்டிருந்தேன்

தேடியதொன்று
கிடைத்ததொன்று....


என்னுடன் ஓடிய
பயணிகளும்
என்னைப் போல்
எதையோ
தேடிக்  கொண்டிருந்தனர்

யாரென்று தெரிந்தவரும்
யாரென்று தெரியாதவரும்
அங்குமிங்குமாய்
ஓட்டம்....

திடீரென்று
திரைப்படத்தில் வரும்
மெ துவேகக் காட்சி போல்
எனது வேகம்
குறைந்து விட

என்னை விட்டு
நான் சென்றேன்...

அழுகையும்
கூக்குரலும்....
அருகாமை சொந்தங்கள்
நட்புகள்

மெல்லப் பறந்தேன்
உருவம் விட்டு
அருவமாய்....

எந்திரம்...
ஓட்டம் விட்ட போது...

எனது சேமிப்பும்
எனது கணக்குகளும்
பூச்சியத்தில்
தொடங்கி
பூச்சியத்திலேயே
முடிந்தது

ஒன்றை விட்டு
ஒன்று போனால்
பூச்சியம்தானே...

வாழ்க்கையின் கணக்கும்
பெரிதல்ல
ஆனாலும் பூச்சியம் புரியாமல்....

எந்திரங்கள்...
ஓட்டங்கள்...
கணக்குகள்....

Sunday, May 3, 2015



சுயசரிதை.....
பிறப்பு: தெரியாது
மறைவு: தெரியாது 

மெளனமாக தொடங்கி 
மெளனமாக முடியும் 
என் வாழ்வு..... 

இரவுகள் வரும், 
பகல்கள் வரும் 
மழை, 
வெயில் 
பனி 
கடும் குளிர் எனக் 
காலங்கள் மாறிகொண்டிருக்கும்.

பறவைகள் வரும்
பூச்சிகள் வரும்
அமரும்
ஓய்வெடுக்கும்
மலம் கழித்து
உதாசீனமாக்கும்

மனிதர்கள் வருவார்கள்
என்ன செய்வார்கள் என்று
யூகிக்க முடியாத
புதிர் புரிவார்கள்


எது எப்படியெனினும்
என் விதிப்படி
மௌனத்தின் ரூபமாய் 
நான் மட்டும் 
எங்கு இருந்தேனோ 
அங்கேயே 
இருந்தேன் 


சொல்ல விரும்பிய 
உணர்வுகளை சொல்ல 
வாயும் இல்லை 
வார்த்தைகளும் இல்லை 
ஒருவேளை 
சொல்லியிருந்தாலும் 
கேட்க 
காதுகளும் இல்லை 

நான் பிறந்தேன் 
நான் வளர்ந்தேன்
நான் வாழ்ந்தேன் 
நான் மறைந்தேன் 

மௌனமாய் தொடங்கி 
மௌனமாய் மறைந்த 
என் உடல் 
யாருக்காகவோ 
என்று 
நான் அறியாமலேயே 

உயிர்கள் வாழ 
உறைவிடம் ஆனேன்... 
உடல்கள் வைக்க 
சவபெட்டியுமானேன்....

எல்லாம் அவன் செயல் 
என்ற வாசகம் 
எல்லாருக்கும் பொருந்துவதை 
மௌனமாகவே 
உணர்ந்தேன்.... 

மௌனம் 
தொடக்கமும், முடிவுமாய்... 
ஒரு அர்த்தம் சொன்னது! 


எனது மின்னணுப்  பிம்பக்கருவியை வைத்துக் கொண்டு ஒரு சிறிய காட்டிற்குள் போன போது அங்கு இருந்த இந்த மரமும், அருகிலேயே விழுந்து கிடந்த இன்னொரு மரமும் அந்தக் காலை நேரத்தில் ஒரு மயானம் போல் காட்சி அளித்தது. அந்தப் படத்தைதான் மேலே காண்கின்றீர்கள். அந்த அமைதியான வாழ்வு யாரும் கண்டுகொள்ளாத ஒன்று என்றாலும், எனக்குள் அது ஒரு தத்துவம் சொன்னது.

மௌனமாய் மௌனத்தில் பிறந்து மௌனமாய் மௌனத்தில் கரையும் மரம் பேசினால் எப்படியிருக்கும் என்ற சுய சரிதையை இதை என் மனம் சொன்னது.

--முகில்