Wednesday, August 25, 2010

பிரிவோபசாரம்...

பயணம்...

திடிரென ஏற்பட்ட
பொழுது போல்...

அறியாமல் வந்தமர்ந்த
சக பயணியின்
அனுமானங்களில்

அனுமதிச்சீட்டு
பெறாமல்
அங்குலங்கள் நகர எத்தனிக்கும்
அடையாளங்கள்

உயிரின் உரசல்கள்
உள்ளத்தின் அறியாமை
சித்திரங்கள் தீட்டிய
சில மௌனத் தூரிகைகள்

சிறகை விரிக்க முயன்ற
சிறு பறவை போல்
எனது வாழ்வின் அத்தியாயம்
கனவில் எழுதப்பட்டது...

நேர்கோடுகள்
நேர்கோடுகளால்
வளைந்தன...

பயணத்தின் பாதை
ஏதோ ஒரு இணைவில்
யதார்த்தம் என்ற
பூச்சில்
வழுக்கியது.

என்னைப் பிரிந்தேன்.

ஒவ்வொரு பிரிவிலும்
உள்ள அர்த்தங்களின்
உரையாடலில்

சொல்லாத உணர்வுகளும்
எழுதாத எழுத்துக்களும்
ஊமை மொழியாய்

அந்தரங்க விசும்பல்களுடன்
என்
பிரிவோபசாரம்....

என்னை நான் பிரிந்தேன்
கேட்காத செவிகளுடன்
பேசாத வாயுடன்
மௌனத்தில் தொடங்கி
மௌனத்தில் முடிந்தேன்....

Saturday, August 7, 2010

சொல்லாமல்...

மௌனம் மன்றாடியது.

இதயத்தின்
சிறு வானத்தில்
ஊமைப் பறவையின்
உணர்வுகள் போல்

சொல்ல விரும்பிய
சுகங்களா?
சொல்ல வராத
சோகங்களா?

மனதின் அறையில்
மோதிய எதிரொலிகள்

வறண்ட பூமியில்
வராத மழையின்
ஊழிக் காற்றும்
மின்னலும் இடியும்
எங்கோ கேட்கும்
சப்தம் போல்...

வானம் பார்த்தேன்...

என் இதயத்திற்குள்
எனக்குத் தெரியாத
எல்லைகளா?

ஏக்கத்தின் மைற்கற்களைக்
கடந்த தூரங்கள்...

மனதின் சாலைகளில்
வருவதும் போவதுமாய்

எங்கு தொடங்கினேன்

எங்கு முடியும் என்று
சொல்லாமல்....

Sunday, August 1, 2010

புதிர்கள்


அறிவு ...
எல்லாம் எனக்குத்
தெரியும் என்றாலும்
ஏதோ தெரியாமல்
ஏதோ புரியாமல்
ஏங்கும் இதயங்கள்
இல்லாமல் இல்லை...

கற்பனைகள் வாழ்வில்
நிஜங்கள் போல்
கனவுலக வாழ்க்கை
இல்லாமல் இல்லை

உள்ளொன்று இருந்தும்
வெளியொன்று காட்டும்
முகங்கள் உலகில்
இல்லாமல் இல்லை

ஆசைகள் துறந்தோம்
அறிவினைத் திறந்தோம்
ஞானியர் ஆயினும்
ஏதோ ஆர்வம்
இல்லாமல் இல்லை

நேயங்கள் செய்வோம்
நியாயங்கள் செய்வோம்
என்று சொல்லி
வேஷங்கள் செய்யும் நாம்
இல்லாமல் இல்லை

அன்பினால் இனைந்தோம்
அன்பிலே விளைந்தோம்
காதலில் முனைந்தோம்...
ஆயினும் பிணக்கங்கள்
இல்லாமல் இல்லை

கனவுகள் கொண்டோம்
காட்சிகள் கண்டோம்
இயல்பிலே மாற்றங்கள்
இயையா ஏமாற்றங்கள்
எல்லோர் வாழ்விலும்
இல்லாமல் இல்லை...

நேற்றொரு தோற்றம்
இன்றொரு தோற்றம்
ஏனிந்த மாற்றம்
சொல்ல இயலாத நிலைகள்
இல்லாமல் இல்லை

சமத்துவம் சொல்வோம்
சமநிலை சொல்வோம்
ஆயினும் பேதங்கள்
இல்லாமல் இல்லை.

கடவுளின் பெயரில்
கருமங்கள் ஆயிரம்
கடவுளின் பெயரால்
சுயநலச் சிறுமைகள்
காண்பவர் உலகில்
இல்லாமல் இல்லை...

கடவுளம் என்ற
கடைச்சிறு உண்மை
கடவுளே என்பதை
கற்றவர் கூட
திடவுளம் இழப்பது
இல்லாமல் இல்லை...

எதனால் விருப்பம்
எதனால் வெறுப்பு
எதற்கு வாழ்க்கை
எத்தனை கல்வி
தத்துவம் வாழ்வில்
இல்லாமல் இல்லை

மனிதனின் மனம்
மனிதனின் குணம்
தேவைகள் மீறிச்
சேமிக்கும் தனம்
தனக்கென வேண்டும்
தாகமும் சுகமும்
பருகுதல் பெருகுதல்
இல்லாமல் இல்லை...

ஏதோ தெரியாமல்
ஏதோ புரியாமல்
ஏங்கும் இதயங்கள்
இல்லாமல் இல்லை...

புதிர்கள் போல்
ஆசைகள் நெஞ்சில்
விதைக்காப் புதர்களின்
வேக வளர்ச்சி போல்
வாழ்க்கை முழுவதும்
இல்லாமல் இல்லை!