Sunday, August 1, 2010

புதிர்கள்


அறிவு ...
எல்லாம் எனக்குத்
தெரியும் என்றாலும்
ஏதோ தெரியாமல்
ஏதோ புரியாமல்
ஏங்கும் இதயங்கள்
இல்லாமல் இல்லை...

கற்பனைகள் வாழ்வில்
நிஜங்கள் போல்
கனவுலக வாழ்க்கை
இல்லாமல் இல்லை

உள்ளொன்று இருந்தும்
வெளியொன்று காட்டும்
முகங்கள் உலகில்
இல்லாமல் இல்லை

ஆசைகள் துறந்தோம்
அறிவினைத் திறந்தோம்
ஞானியர் ஆயினும்
ஏதோ ஆர்வம்
இல்லாமல் இல்லை

நேயங்கள் செய்வோம்
நியாயங்கள் செய்வோம்
என்று சொல்லி
வேஷங்கள் செய்யும் நாம்
இல்லாமல் இல்லை

அன்பினால் இனைந்தோம்
அன்பிலே விளைந்தோம்
காதலில் முனைந்தோம்...
ஆயினும் பிணக்கங்கள்
இல்லாமல் இல்லை

கனவுகள் கொண்டோம்
காட்சிகள் கண்டோம்
இயல்பிலே மாற்றங்கள்
இயையா ஏமாற்றங்கள்
எல்லோர் வாழ்விலும்
இல்லாமல் இல்லை...

நேற்றொரு தோற்றம்
இன்றொரு தோற்றம்
ஏனிந்த மாற்றம்
சொல்ல இயலாத நிலைகள்
இல்லாமல் இல்லை

சமத்துவம் சொல்வோம்
சமநிலை சொல்வோம்
ஆயினும் பேதங்கள்
இல்லாமல் இல்லை.

கடவுளின் பெயரில்
கருமங்கள் ஆயிரம்
கடவுளின் பெயரால்
சுயநலச் சிறுமைகள்
காண்பவர் உலகில்
இல்லாமல் இல்லை...

கடவுளம் என்ற
கடைச்சிறு உண்மை
கடவுளே என்பதை
கற்றவர் கூட
திடவுளம் இழப்பது
இல்லாமல் இல்லை...

எதனால் விருப்பம்
எதனால் வெறுப்பு
எதற்கு வாழ்க்கை
எத்தனை கல்வி
தத்துவம் வாழ்வில்
இல்லாமல் இல்லை

மனிதனின் மனம்
மனிதனின் குணம்
தேவைகள் மீறிச்
சேமிக்கும் தனம்
தனக்கென வேண்டும்
தாகமும் சுகமும்
பருகுதல் பெருகுதல்
இல்லாமல் இல்லை...

ஏதோ தெரியாமல்
ஏதோ புரியாமல்
ஏங்கும் இதயங்கள்
இல்லாமல் இல்லை...

புதிர்கள் போல்
ஆசைகள் நெஞ்சில்
விதைக்காப் புதர்களின்
வேக வளர்ச்சி போல்
வாழ்க்கை முழுவதும்
இல்லாமல் இல்லை!

2 comments:

  1. ரொம்ப அழகான வரிகள். விடையில்லாப் புதிர்கள் தானே வாழ்க்கை.

    ReplyDelete
  2. புதிர்கள் வாழ்க்கை முழ்வதும்
    இல்லாமல் இல்லை!

    ReplyDelete