Saturday, June 26, 2010

வேண்டுகோள்....


உண்மை சொல்ல
முயன்ற தருணங்கள்....
வார்த்தைகள் வரவில்லை

பொய்கள் சொன்னேன்,
உண்மையாயின...

என் மனதினுள்
நானே கேள்வியானேன்...

நீ எப்படி பதிலானாய்?

சொல்ல விரும்பிய
உணர்வின்
தவம்....

வரமளிக்க நீ....

ஒரு வாஞ்சைப்
போராட்டம்.

நானும் ஒரு
காதல் போராளி போல்...

காதல்
என்
பிறப்புரிமை என்று

கவிதைகளாய்,
கட்டுரைகளாய்,
கடிதங்களாய்...

என் கனவில்...

விடியலின் அடிமையாய்
வாழ்வின் வலிகளில்
காந்தியானேன்.

அஹிம்சையின்
ஹிம்சையில்
என் அவதாரம்....

என்னை மறுபடி
உறங்க விடுங்கள்
என் கல்லறையில்

காதலி இல்லாத
காதலன் என்று
பெயரிடுங்கள்

தோற்றம் மறைவு
மட்டும் எழுத வேண்டாம்...

நான் வாழ்வேன்...

எப்போதும்
என் கனவில்.....

என் வேண்டுகோள் மணு
புரிகிறதா?

Tuesday, June 22, 2010

பித்தனா? புத்தனா?

உறைந்து போன
சமயத்தின் சமாதானம் போல்
ஒரு
நொடியின் சனனம்....

என் எதிர்கால முன்னுரையாய்...
எதுவரை போகும் என்று
தெரியாத பாதையாய்
விரிந்த விதியின்
புரியாத வீதியாய்,

யாரோ இட்ட பிச்சையில்
என் முறுவல்கள்
என் அழுகைகள்
என் தேடல்கள்
என் தொலைவுகள்

வாழ்க்கை என்ற
விளையாட்டின்
நடுவரில்லா
தீர்மானங்கள்!

தொடக்கங்களின்
முடிவாய்
முடிவின்
தொடக்கங்களாய்....

ஜெயித்ததும்
தோற்றதும்
ஒரு பரிமாற்றம் போல்

நான்
அமைதியாய்

ஒரு அசைவற்ற
சடலமாய்....

அகங்காரம்
என்ற புள்ளியை
அறிய மேற்கொண்ட
அறியாமைப் பயணத்தின்

அடிச்சுவடுகளில்...
நான்....
யார் செய்த வியாபாரம்?

என் கேள்வியின்
இத்யாதிகள்
புரியாத செவிகள்....

ஒரு புறம் பித்தனாய்
மறுபுறம் புத்தனாய்...

Friday, June 4, 2010

நீ...நான்...எனும் உலகம்!

தென்றலின் தீண்டலாய்
தீயின் தனலாய்,
இதயப் பட்டறையில்
இழகிய உணர்வாய்....

ஏதேதோ வரைந்தும்
தெரியாத சித்திரமாய்
மௌனக் கடலின்
மோதிய நீரலைகளாய்...

அணாதையாய்த் தெரிந்த
ஆகாய விரிவில்
திசைகள் இல்லாத
அந்தரத் தேடலாய்

சொல்லாமல் புரியும்
சுதந்திர வார்த்தைகளாய்
நில்லாமல் ஓடும்
நீரின் சிரிப்பாய்

என்னில் இருக்கும்
என்னில் இயங்கும்
இரவும் பகலும்
எனக்காய்த் துடிக்கும்
இதயம் போலே....

என்னை இயக்கும்
என்னில் கலக்கும்
எனக் கென்றிருக்கும்
மூச்சைப் போலே

இந்த
உயிரின் ஒப்பந்தம்
உனது பந்தமா?

தெரியாத பொழுதுகளின்
துகிலுரிப்பில்
திறந்த மேனியாய்...

என்னில் வாழும்
நினைவுகளின்
யதார்த்தம்

என்னை மீறி
எல்லைகளில்லாமல்
எல்லாம் சூழும்
கற்பனை உலகம்....

உனது சுவடுகளில்
உன்னைத் தேடுகிறேன்.

சுற்றிச் சுற்றி
தொடரும் தேடலில்...
இலக்குகள் சுழன்ற போது
எனது சுவடுகளாய்....
என்னைத் தொடர்ந்தாய்!

என்னை ஸ்பரிசித்த
உனது
சுவாசத்தின் தொடர்பில்....

நான் சஞ்சரித்த
ஒரு
புண்ணிய யாத்திரையின்
சமிக்ஞையாய்

ஒருமுறை வாழக் கிடைத்த
இந்த சமயத்தை
உனக்கே சமர்ப்பணம் செய்கிறேன்!

உன்னால் உருவான
இவ்வுலகம்....

அதன் முகவரியாய்...
நீ....நான்....
ஒரு மெல்லிய சிரிப்பாய்...
வாழ்ந்துவிட்ட நிம்மதி
எனும் உணர்வு!
photo courtesy: widget.bigoo.ws