Thursday, April 9, 2009

கேள்வியும் நானே பதிலும் நானே

கேள்வி ஒன்று வந்தது -பதில்
தேடி மனம் அலைந்தது
வாழ்க்கை போன வேகத்தில் -ஒரு
வரம்பு அற்றுப் பாய்ந்தது
ஆசை கோடி கொண்ட நெஞ்சை
அமைதி கொள்வ தெப்படி
ஒன்றிரண்டா ஆசைகள்
இதய மாயை அப்படி..

மனிதராகப் பிறந்த நாம்
வேண்டுவது என்ன?

மனித வாழ்க்கை அரிதென்றால்
மானுடம்தான் என்ன?

கேள்வி ஒன்று பலவாக
பிறவிபல எடுத்தது...
பதில் அறிய இதயத்தின்
சுவர்களிலே பொரித்தது

ஒரு கூட்டுக் கிளியாக
வழி தேடி தவித்தது
பறந்துயரப் பார்த்திடவே
மொழி கூவி கேட்டது....

ஈசல் போல செல்லுகிற
பயணமிதில் படபடத்து
உள்ளுணர்வின் எதிரொலியை
உணராமல் தவிதவித்து
சாயங்கள் பூசி பொய்க்குள்ளே
புதைவோம்...சாத்திரங்கள் பேசி
வேஷங்கள் புணைவோம்...

வாழ்க்கை என்ற வாசகம்
கருவறையில் தொடங்கும்
கல்லறையில் முடியும்

நாடகத்தில் நாயகராய்
நடிக்கின்ற காட்சி
முடிகின்ற தருணத்தில்
அழும் மனசாட்சி

தொடக்கம் என்றிருந்தால்
முடிவும் உண்டு அறிவோம்
அடக்கத்தில் அன்பு செய்து
ஏன் வாழ்தல் ஆகாது
குறைகள் இல்லா சிருஷ்டி எது
நிறைகளில் நாம் மகிழ்வு கொள்வோம்

சிறைக்கதவை திறந்திடுவோம்
சிறகுகளை விரித்திடுவோம்

No comments:

Post a Comment