Saturday, March 14, 2009

என் புத்தகம்...

எழுத முயற்சித்த தருணங்கள்...
எண்ணத்தின் மோதல்கள்
எதை சொல்வது
என்ற கேள்விகள்....
மனம் மக்காய் முழித்தது!

பல வருடம் பின் சென்று
மட்டப்பா தெருவினிலே
எதை செய்வது என்று தெரியாமலே
ஓடித் திரிந்த கதை சொல்வதா

இரவு நிலா தந்த பயம்
குடை பிடித்து வானத்தை
மறைத்த கதை சொல்வதா

ஒன்பது வயதினிலே
அண்ணன்மார் புகை விட்ட
ஸ்டைல் பிடித்து
நைனாருடன் பிடித்த
பீடி கதை சொல்வதா?

மேற் படிப்பு என்று சொல்லி
மெட்ராஸ் போன அண்ணன்
பிரிவாலே அழுது மனம்
துடித்த கதை சொல்வதா?

அண்ணன் வேலையில்
சேர்ந்து விட்டாங்க
இனி மெட்ராஸ்தான்
என்று எதிர் பார்த்த கதை சொல்வதா?

பட்டினத்தில் குடி புகுந்த
முதல் நாளே
அண்ணன் காதலித்து
மணம் செய்த புது அண்ணி
அழ வைத்து மனம் நொந்த
அருங் கதையை சொல்வதா?

ஆங்கிலம் வராது என்றால்
அதை நீ எழுதாதே
அப்படி சொன்ன மாமா வார்த்தை

பாடாதே அது சகிக்கவில்லை
என்று சொன்ன அண்ணன் வார்த்தை

முயலாதே அது வீண்
என்று சொன்ன அப்பா வார்த்தை

ஊக்கம் தராத அந்த நொடிகள்
செய்த தாக்கம் பற்றிச் சொல்வதா?

இரண்டு வரிகள்
எழுதி அதைநான்
கவிதை என்றபோது
ஆஹா அருமை
என்று சொன்ன நண்பன்

கணக்கு வாத்தியார்
அடிக்கு பயந்து
கட்டுரை போட்டியில்
பங்கெடுத்து
பள்ளியில் முதலாய்
வந்த போது
சூப்பர்டா மச்சி என்று
சென்னை தமிழில்
நண்பன் சொன்ன
சீர்திருத்த வாழ்த்தை சொல்வதா?

வாழ்க்கையின் வழியில்
வலியின் மைல் கற்கள்

ஏனோ தெரியவில்லை
காலை நேரத் தனிமையிலே
எத்தனையோ எண்ணங்கள்

கதை கதை என்று
வாழ்க்கையிலே
எத்தனை பக்கங்கள்!

நான் எதை சொல்வது?
ஆசைகளின் பாதையில்
பயணங்கள் ...

கண் அயர்ந்தால்
கொன்று விடும் திருப்பங்கள்

நேற்று இருந்தது
இன்று இல்லை
இன்று இருப்பது
நாளை இருக்குமா

சுகமும் துக்கமும்
உறவுகள் !

இரண்டுமே மனதின்
திறவுகள்!
வாழ்க்கை விதியின்
விரிவுகள்...

எதை எழுதுவது?
எதை சொல்வது?
போகிறேன் ....
என் புத்தகம்
நானே எழுதுகிறேன்
நானே படிக்கிறேன் ....

No comments:

Post a Comment