Monday, May 6, 2013

பெண் என்ற கோட்பாடு...


மத்தியான வெய்யிலில்

மண்டை சுட்டு
நிழலுக்கு ஒதுங்கிய
வீட்டு வாசல்.

எப்படி இருக்கிறாய்

என்ற குரலில்
பெண்மை குறைந்த
கரகரப்பு..

திரும்பிப் பார்த்த

அனிச்சையின் முன்
சுமார் ஐம்பது வயதில்
எப்போதோ பார்த்த
செயா...

ஞாபகமிருக்கா என்றாள்...

இல்லாமலா?
என்ன அப்படி ஓர் கேள்வி
என்று நான் கேட்டாலும்

தலை வாராமல்

தற்காலம் தேடும்
தங்க மினுமினுப்புகள் இல்லாமல்
ஒரு தாலிக்கயிறும்
இல்லாமல்
நின்றவள்
செயா போல் இல்லைதான்.

இருபது வருடங்களுக்கு முன்

இலங்கை வாழ்
உலகநாதனின் மனைவியானவள்...
ஒன்றன் பின் ஒன்றாய்
மூன்று பிள்ளைகளுக்குத்
தாயானவள்
என்ற ஓர்மை எனக்குள்

அவள்

என் தோழியாய்,
என் கிராமத்து வீதிகளில்
விளையாண்டு திரிந்த காலமும்
சிரித்து மகிழ்ந்த காலமுமாய்
என நினைவில் வாழ்ந்தவள்...

தூரம் பறந்து விட்ட

என் உலகம்
வேறான பின்
வேரின் உறவுகள்
மனதின் காணமுடியா
மூலைகளில்
மறைந்த இயற்கையானது.

செயாவின் தோற்றம்

என்னை
செப்பனிட்ட நிகழ்காலம்

 மானசீக ஒப்பந்தங்களை

விதியின் வேட்டையில்
பறிகொடுத்து விட்டவளாய்
கணவன் மறைந்தான்.
பெற்ற மகன்களில்
ஒருவன்
நோய்க்குப் பலி.
இன்னொருவன் இருந்தும்
மறந்தான்.

உற்றவனும் செல்ல

உயிர்மகவும் தள்ள
அவளிடம்
ஒட்டிக் கொண்ட
வாழ்க்கை மட்டும்
வெட்கப் படாமல் கேட்டது.

ஏதாவது காசிருக்குமா?

மெல்லக் கேட்டவளின்
கைகளில்
நான் கொடுத்த
நூறு ரூவா
நான்கு நாட்களாகும்.

எஞ்சி நின்றதெல்லாம்

எதிர்கொண்ட வாழ்வும்
ஏக்கங்களும்தான்.
என்று சொல்லாமல் சொன்ன
செயா

எத்தனனயோ

தமிழ்ப்பெண்களின்
உடன் பிறவா சகோதரி.

வேகமாய் வளர்ந்து விட்ட

விஞ்ஞானம்.

21-ஆம் நூற்றாண்டு நாகரிகம்.


விதவையானவள்

இவள் மட்டும்
இன்னும்
யாரோ இட்ட
வரம்புகளில்
தன் வாழ்வுடன்
வதம் செய்கிறாள்.

உலகம் மாறிவிட்டது

என்ற
மேடை முழக்கங்களுக்கிடையே
இன்னும்
செயா போன்ற
கோட்பாடுகள்...

--முகில் 





No comments:

Post a Comment