Thursday, May 23, 2013

நான் என்ற கிரகம்



















ஏதோ ஒரு எண்ணம்
ஏதோ ஒரு ஏக்கம்
என்னுள் சுற்றிய நான்
கிரகிக்க முடியாத கிரகம்

தோராயணம் அறியாத
துல்லியம்
நீள் அகலப் பாதைகளில்
எனக்கு நான் கண்ட
நிதர்சனம்

அங்குலங்கள் நகர்ந்த 
பொழுதுகளில்
என் சுயங்கள் தொலைந்த 
பூகோளம்

சுதந்திரம் இருந்தும் 
முடங்கிய கைதியாய்
சுற்றிடும் கோள்களில்
சோதனைச் சரித்திரம்

ஒரே வழியில்
ஒரே பயணம்.
பச்சோந்தி போல் 
பல அரிதாரம்
என்னைக் காணத் 
தேடிய ஆடிகள்

பிறவியின் ஆழியில்
வெவ்வேறு பிம்பங்களாய்
என்னை நான் வேஷித்தேன்

அன்னையின் மடிவிட்ட
நொடி முதலாய்
தொடங்கிய 
அழுகையும் ஏக்கமும்
வாழ்க்கைத் தின்னை
விட்டகலும் வரை...

அடையாளங்கள் காட்டிய
ஆடிகளின் பிரதிபலிப்பில்
எரிகின்ற சுடராய்
என் ஆத்மா...

சுயத்தின் சாலைகளில்
என் தேடலின்
அறிகுறியாய்

ஏதோ ஒரு எண்ணம்
ஏதோ ஒரு ஏக்கம்
என்னுள் சுற்றிய நான்
கிரகிக்க முடியாத கிரகம்
ஆதியும் இல்லாமல்...
அந்தமும் இல்லாமல்...

....................முகில்

No comments:

Post a Comment