Monday, May 13, 2013















ஒரு அறிவிப்பு: 
என் கிராமத்தைக் கண்டால் சொல்லுங்கள்...

நீண்ட காலம்...
கழித்து
மறுபடியும்
என் கிராமம்.

வாழ்க்கையின் வழி ஓடி
சக்கரச் சுழற்சியிலே
இக்கரை வந்த நேரம்

பத்து வருடங்கள்...
3650 நாட்கள்தானே!

என் கிராமம்
என்ற அடையாளங்கள்...
தேடிய என் கண்களில்...

வானம் தொடும்
தொலைவு வரை
பசுமை படர்ந்த
காட்சிகள் தொலைந்து
காய்ந்த புல்லும்
கருவேல முள்ளுமாய்...
உஷ்ணம் பறந்த
உக்கிரம் கண்டேன்...

சிறுசிறு செங்கற்களை
நட்டு
வீட்டுமணை விற்ற
நவின விவசாயம்
கண்டேன்.

தென்னைகளும் பனைகளும்
உரசிய ஓலைகளின்
சங்கீதம் மாறி
உயர்ந்து ஓங்கிய
காற்றாடி ஆலைகளின்
உவ்...உவ்.. என்ற
ராட்சச உறுமல்கள்...

கைகாட்டி தொடங்கி
ஊர் ஆலமரம்
ஒரு கிலோமீட்டர்.

இரண்டு பக்கமும்
சிந்தை மயக்கிய
நெற்பயிரும் சோளமும்
சூரிய காந்திப் பூக்களும்
புதிதாய் முளைத்த
கட்டிடக் கல்லறைகளில்
புதைந்தது கண்டேன்.

வறண்ட பனையன்குளம்
சிதிலமடைந்த
பாட்டாரித் தாத்தா
பருப்புத் தாத்தா
பம்பு செட்டுகள்

அழகாய்
பசுமை அணிந்து
காற்றிலாடி
நின்ற
கரை மரங்கள்
நிர்வாணமாய்க்
காய்ந்த உடல்
காட்டி
வாடி நிற்க

விளைநிலம் யாவும்
ஏதாவதொன்றாய்...

இயற்கை தேடிச் சென்ற
இடமெலாம்
செயற்கை புகுத்திய
செயல்கள் கண்டேன்....

ஒரே ஊருக்குள்
ஒரே தெருவுக்குள்
கைப்பேசி அழைப்புகள்
பரிமாறக் கண்டேன்.

வீட்டிற்கு வீடு
வீட்டுமனை விற்கும்
முகவர்கள் கண்டேன்.

முன்பிருந்த ஞாபகங்கள்
முகவரியற்று
வழிமாறிச் சென்றுவிட்ட
இனம்புரியாப் பயமாய்..
இதயம் படபடத்தது.

கருதறுக்கும் பெண்களில்லை
கஞ்சி சுமக்கும் சிறுசுகளில்லை
உழுகின்ற உழவரில்லை
சனிக்கிழமை சந்தையில்லை
ஓடுகின்ற மதகில்லை
தண்ணி பாச்சும் சின்னனஞ்சி இல்லை....

நடந்தேன்...நடந்தேன்... நடந்தேன்....
தூரத்தில் அசைந்த
ஒரு உருவம்....

ஆவலாய் அருகே
சென்றேன்.

65 வயதிருக்கும்...
தனியே தன் நிலத்தில்...
ஒற்றையாய்
மண்வெட்டியுடன்....

தாத்தா...
என்ன இது தனியே
உதவிக்கு ஏன்
யாருமில்லை?
கேட்டேன்.

அட என்ன தம்பி....
விவரம் தெரியாத
ஆளா இருக்கிக....

ஊரல்லாம்
ஒருத்தன் இல்ல...
மதுரக்கும் சென்னைக்குமா
ஒடிட்டாங்க....

விவசாயம் செத்து
பல நாளாச்சுப்பா...

எனக்கு மட்டும்
விடமுடியல...

அவர் சொல்
ஆணி போல்
இறங்கியது....

எனக்கு விவசாயம்
தவிர
வேற ஒன்னும் தெரியாதப்பா...

நான் வேண்ணா
சொல்றன் பாருங்க...
நாளைக்கு
சோத்துக்கு கிடந்து
அழியத்தான் போறோம்...

விவசாயம் செத்து
ரொம்ப நாளாச்சுப்பா....

சிரித்துவிட்டு
மறுபடியும்
மறுபடியும்
அவர் மெல்ல
மண்ணை வெட்டிய
ஒலி
என் இதயத்தில்
ஒலிக்க....

படிப்பும், பதவியும்,
செல்வமும், செழிப்பும்
சரிதான்....

மண்ணில்
கால் வைக்க
ஆளில்லாமல் போனா....

என் கிராமம்
எப்படித் தொலைந்ததென்று...

எனக்குள்
தேடத் தொடங்கினேன்....
யாராவது
கண்டால்
சொல்லுங்களேன்.....

.... முகில்

No comments:

Post a Comment