Tuesday, May 21, 2013














மாறாதா என் பாரதம்? 

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு.
உண்மைதான் பாரதி....

ஒரு தாத்தா
வயதாகிவிட்ட
உன்னை
இன்னும் ஒரு தோழனாகவே
எண்ணும் பாங்கில்
இதயத்தில் வாழ்கின்றாய்

ஆகவே
உன் சொற்களே
என்னில் வந்தன.

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரத நாடு.

உன் கனவு
உன் போராட்டம்
உன் உணர்வுகள்...
நீயிருந்த காலம்
இன்று
இறந்த காலம்!

இன்று ...
பாரதம் படும் பாடு
சுதந்திரம் பெற்ற பின்னும்
சுற்றி வரும் கேடு.

ஆளவந்த அந்நியர்
போய்
அரசியல் என்ற பெயரில்

அந்நியனை மிஞ்சிய
அராஜகம்
இந்தியனே செய்கின்றான்.

கோடிகள் பெருக்கும்
நோக்கில்
அரசியல் களம் குதிக்கும்
உடன் பிறவா சகோதரர்கள்....

சுயராச்சியம்
எமது பிறப்புரிமை
என்று போரிட்டுப்
பெற்ற சுதந்திரம்.

இன்று
ஓட்டுகள் பெறுவதும்
உயர்ந்த பதவிகள் பெறுவதும்
சுயநலம் காப்பதும்
எம் பிறப்புரிமை
என்று
பொய்யர்கள் கூட்டமாய்
அரசியல் நேதாக்கள்

தேசத்தின் மீது
பற்றில்லை
நேசத்தின் நிழல் கூட
சற்றில்லை....

நூற்றி இருபது லட்சம் உயிர்கள்...
இந்திய சனநாயகம்....
மனிதரைப் பெருக்கும்
உற்பத்திச் சாலையில்
உலகில் இரண்டாம் இடம்.

காய்ந்து வரும் விளைநிலம்
காணாமல் போன விவசாயி
வயிற்றிற்குக் வழி
கிடைத்தால்
போதும்
சாலையோரமும்
மாளிகையே
என்று வாழும்
புழுதியாத்மாக்களும்

ஏதோ ஒரு வேலை
ஒரு வருமானம்
ஒரு சிறு குடும்பம்
எனது உலகம்
என்று
அன்றாடம் கழிந்தால்
போதும் என்ற
வாழ்க்கை ஓட்டிகளும்

கல்வி என்ற
விலைபொருளை
சந்தைகளில் பெற்றிடும்
கன்றுக்குட்டிகளும்

மதிப்பெண் பெற்றாலே
மனிதக்கடலில் நீந்திடலாம்
என்ற நியதிகளில்
வாழ்க்கையறிய
வழியில்லாமல்
வாழ்வை உணர
வகையில்லாமல்
போடும் போட்டியிலே
தூக்கில் தொங்குவதும்
விஷத்தை அருந்துவதுமாய்
மாணவர் சமுதாயம்.

சாதிகள் இல்லா சமுதாயம்
கேட்டாய்.
இன்றும்
சாதிகளில் இனம் பிரிக்கும்
சாத்திரங்கள்
சூத்திரங்கள்
மனிதம் கொல்லும்
சூட்சுமங்கள்...

வேலியே பயிரை மேய்வது போல்
நமக்காக நாம்
ஏற்படுத்திய
அமைப்புகள்
நம்மையே வேட்டையாடும்
நரகச் சூழல்கள்

கொலை வெறியும்
கோரமுமாய்
பெண்களின் நிழலையும்
கற்பழிக்கும் பித்தர்கள்

மிருகமே மிகுந்து
சிசுவையும்  
பலாத்கரிக்கும்
கிராதகர்கள்

சொத்து சுகம்
என்ற
சுயச் சேர்க்கைகளில்
அண்ணனும் தம்பியுமே
பகையாளிகள்

அடுத்தவன் என்றால்
அதனினும் கொடுமையே...

இல்லாமை இல்லாத
நிலை வேண்டும்
என்பதனால்
மனிதம் தொலைத்தா
வாழ்வை தேடுவது?

மனம் ஒத்த நிலை
மனித நிலை என்ற
மைய நிலை விட்டு
பணமென்ற பொருளின் பின்
தினமலையும் நிலை பெற்ற
புதிய வாழ்க்கை

அழுபவன் அழுவதும்
வலியில் அழிப்பதும்
அழிவதுமாய்
லஞ்சம், ஊழல்,
கொலை, கொள்ளை
பலாத்காரம், கற்பழிப்பு
என்று
நவீன பாரதத்தின்
அன்றாட வாழ்க்கை

இதுவே யதார்த்தம்
என்று பழகி
இதற்குள் அடிமையாகி விட்ட
எமது பாரத மக்கள்

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்
என்று
இன்றும்
பாடிக் கொண்டுதான் இருப்பாய்
நீ இருந்தாலோ பாரதி...

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ?

ஏழ்மை இல்லாத நிலை
எல்லார்க்கும் ஒரு தொழில்
யாவர்க்கும் நல்ல வசிப்பிடம்
அனைவரும் மனிதரென்ற
பரஸ்பர உரிமையை
பாகுபாடன்றிப் பெறும் நிலை
கல்வி
என்ற செல்வம்
சமத்துவமாய் இலவசமாய்
மாணவர் பெறும் நிலை
லஞ்சமும் ஊழலும்
இல்லாத
சமுகம் காக்கும்
நல்லவர் சேர்ந்த
அரசியல் வேண்டும்

உனைப் போன்ற
உயிர்கள் வேண்டும்
உனைப் போன்ற
உள்ளம் வேண்டும்....

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ?

அழுகின்ற மனதினுள்
எழுகின்ற கோபங்கள்
மாறாதா பாரதம்
என்றே என் தாபங்கள்....

................................முகில்









No comments:

Post a Comment