Wednesday, July 14, 2010

ஞாபகம் மறந்த போது....

நடக்கும் பருவம்
வந்த பின்னும்,
ஒரு
சிறு
தவழும் இயந்திரப் பொம்மை கண்டு
அழுத ஞாபகம்....

அம்மாவைப் பிரிந்து
பள்ளி சென்று
'அ'னா எழுதிட
அழுத ஞாபகம்....

சிறு குடும்பத்தின்
சிறகுகளாய்...
கூடப் பிறந்த
அண்ணன்களைக் காண
ஆசை ஆசையாய்
துடித்த ஞாபகம்.

அம்மாவின் கதைகள்
கோயில் புளியோதரை
நண்பர்களுடன் பம்பரம்
நையாண்டி,
நமட்டுத்தனக் குத்தகை ஞாபகம்....

பள்ளியில் புத்தகத் திருட்டு
படமில்லாத புத்தகம் வெறுப்பு
ஆங்கிலம் என்றாலே
அழாத குறையாய்
காதினில்
விழாத ஞாபகம்...

இரவினில் ஏனோ
நிலவுக்குப் பயந்து
நிலவை மறைக்க
குடை பிடித்த ஞாபகம்.

ராஜா செருப்பு போல்
வளைந்த காலணி
அணிந்து நடித்த
நாடகம் ஞாபகம்...

அதே உடையில்
அறியாத கம்பீரம்
அழகென்று எண்ணி
ஊர்வலம் வந்து
ஊரார் பார்த்திட
அலைந்து சுற்றிய
நாட்கள் ஞாபகம்.

ஆட்டமும் ஓட்டமும்,
ஆங்காங்கே திரிந்ததும்,
நாட்கள் ஓடியும்
நண்பர்கள் மட்டும்
நினைவினில்
நிறைந்த ஞாபகம்....

பள்ளியில் கல்லாத
கல்வியின் ஆழம்
அம்மா சொன்ன
கதைகளில் வாழ்ந்து
இதயத்தில்
ஆயிரம் பாடங்கள்
கற்பித்த ஞாபகம்.

அன்பும் பண்பும்
சில நல்லவர்
பேசிய பேச்சில்
செய்த செயலில்
கற்ற ஞாபகம்...

வளர்ந்த காலங்கள்
வாலிபப் பருவத்தில்
காதலின் அறிமுகம்
கண்களின் சக்தியை
கண்ட ஞாபகம்.

அதுவரை கொண்ட
ஏக்கங்கள் யாவினும்
காதலின் ஏக்கம்....
முதன்முதல் நானே
ரசித்த உணர்வாய்...

கவிதையாய் பிறந்த
உயிரின் ஊற்றாய்
கனவின் லயிப்பில்
கண்ட உலகாய்
காதல் ஞாபகம்.

காதலும் யதார்த்தமும்
நடத்திய போரில்
வீழ்ச்சியா வெற்றியா
என்றறியாமல்
எல்லாம் முரணாய்
வாழ்வின் பாதைகள்
பிரிந்த ஞாபகம்...

வாழ்வின் ஆயிரம்
பரிமாணங்கள்...
யாவும்
ஒன்றாய் பரிமளிக்கும்
இல்லற வாயிலை
மணையாள் கைகளில்
தொட்ட ஞாபகம்....

உறவுகள் என்று
இருந்தவை யாவும்
ஒவ்வொன்றாய்ப்
பலம் இழந்த ஞாபகம்.

அன்பின் ஆழம்
அறியா வலியுடன்
வரையரை வாழ்வின்
வலிகள் ஞாபகம்

சிற்றீசல் பயணத்தின்
நேற்றின்
இனிய நினைவுகள்...
நெஞ்சின் காயம்
ஆறிட இட்ட
மருந்தாய் ஞாபகம்...

ஓடும் சமயம்...
வண்ணம் மாற்றும்
தன்னை மறக்கும்
இதயம் ஞாபகம்...

போகப் போக
மாறும் மாற்றங்கள்..
என்னைத் தேடி
நாளும் ஓட்டங்கள்....

போகும் வழியோ
வரும் வழியோ
எங்கோ
என்னை மறந்த ஞாபகம்

முகில்

2 comments:

  1. அருமையான எதார்த்தமான வரிகள்

    ReplyDelete
  2. நண்பர் ஹாசிம் அவர்களுக்கு

    உங்களின் வருகைக்கும் எண்ணத்திற்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete