Saturday, February 27, 2010

அவள் நான்!

கதை சொல்லிய வானம்
கற்பனைகளின் கருவறையாய்...
என் எண்ணக் குழந்தைகளை
ஈன்ற தாய் போல்....


விண்மீன் வித்தைகளில்
நிலவின் வெள்ளி இதழ் சிரிப்பில்
அண்ணாந்து பார்த்த என்னை
அயராமல் ஈர்த்தவள்...


இரவுகளின் மௌனத்தை
கிராமத்துக் காற்று முத்தமிட
தமக்கென்றே இரவு வருகிறது
என்று
உச்சஸ்தாயியில் கீச்சிடும் பூச்சிகளின்
காதல் கீதங்களுடன்


அணைத்தும் ஒருங்கிணைய
அது ஒரு லயிப்பாய்
என் இதயத்தில்
இசை பாடிய இளமையாகும்.


நான் எழுதாத பருவத்திலும்
இதயம் எழுதிய கவிதையாய்
இயற்கையின் வனப்பில்
என்னை இழந்த பொழுதுகள்...


கண்களின் முதல் சுவாசமாய்
அவள் அழகையே
முகர்ந்தேன்


அமுதின் இனிமை அறியாச்
சிசுவாய்
அவளையே பருகினேன்....


சோகங்கள் வரும் என்று
வாழ்வின் திருப்பங்கள் காத்திருக்க
என்னுடன் வந்த
சுகமாய் இருந்தாள். 


நான் போடாத பாதைகள்
எனை அழைத்த போது 
அறியாமல் திகைத்த என்னை
அரவணைத்து

இடர்களில் தடுமாறி
இன்னலில் அழுத போது
அறியாக் கரங்களால்
என் கண்ணீரை துடைத்தாள்


வாழ்வின் கண்ணிமைகள்
ஒரு முறை
திறந்து மூடும் பயணமாய்


பயணிக்கும் என் பாதையில்
அவளே நடை பயில்வித்தாள்
நடையாகினாள்...


வார்த்தைகள் தேடும்
வாக்கியத்தின்
நாக்காய்,
வாக்காய்
அர்த்தங்களாய்


என்னோடு....
அவள் நான்
இல்லாத பயணமா
என்று
சன்னலோரம் தனிமையில்...
அவளுடன்...



No comments:

Post a Comment