Sunday, May 31, 2015

பிம்பச் சுழற்சி

















எனக்குள்...
அருகில்....
இருந்தும்
தொலைவில்

ஒரு புறம் நான்
மறு புறமும் நான்

உணர்வுப்படி
ஒருவன்
ஒத்திகை பார்க்கும்
ஒருவன்

இயற்கையும்
செயற்கையுமாய்
நிகழ்காலங்கள்

இழந்துவிடும்
இறந்தகாலங்கள்
எதுவோ
எதற்கோ
எதிர்காலங்கள்

இதுதானோ
வாழ்வியல்
கோலங்கள்?

எனக்குள் ஒருவனும்
எதிரே ஒருவனும்
எதிரும் புதிருமாய்
எத்தனை வடிவங்கள்

எனது பார்வையில்
என்னைக் கண்டிட
எத்தனை முயற்சிகள்

என்னைக் காணுமுன்
என்னைத் தொலைக்கும்
எத்தனை சுழற்சிகள்!

 உயிரியல் புணர்ந்த
உயிரின் ரூபமாய்
உறவுகள்  கொடுத்த
அவளின் தானமாய்
வாழ்க்கை என்று
வந்ததொன்று
வாஞ்சை கொண்டு
வாழ்ந்ததின்று...

அனுபவித்தவன்
மனிதன்

முற்றும் துறந்தவன்
முனிவன்

தொடக்கமும்
முடிவுமாய்
ஆதியும்
அந்தமுமாய்
எனக்குள்
நானே
இறைவன்


பயணம் உண்டு
பயணியும் உண்டு
பாதைகள்
பல ஆயிரம் உண்டு


ஆனால்
தொடங்கியது
தொடர்ந்தது
முடிந்தது
எல்லாமே
பிம்பச் சுழற்சியில்
வெவ்வேறாய் தெரியும்
ஒரிடமே!


:-) முகில்
மே 31, 2015





No comments:

Post a Comment