Sunday, May 3, 2015



சுயசரிதை.....
பிறப்பு: தெரியாது
மறைவு: தெரியாது 

மெளனமாக தொடங்கி 
மெளனமாக முடியும் 
என் வாழ்வு..... 

இரவுகள் வரும், 
பகல்கள் வரும் 
மழை, 
வெயில் 
பனி 
கடும் குளிர் எனக் 
காலங்கள் மாறிகொண்டிருக்கும்.

பறவைகள் வரும்
பூச்சிகள் வரும்
அமரும்
ஓய்வெடுக்கும்
மலம் கழித்து
உதாசீனமாக்கும்

மனிதர்கள் வருவார்கள்
என்ன செய்வார்கள் என்று
யூகிக்க முடியாத
புதிர் புரிவார்கள்


எது எப்படியெனினும்
என் விதிப்படி
மௌனத்தின் ரூபமாய் 
நான் மட்டும் 
எங்கு இருந்தேனோ 
அங்கேயே 
இருந்தேன் 


சொல்ல விரும்பிய 
உணர்வுகளை சொல்ல 
வாயும் இல்லை 
வார்த்தைகளும் இல்லை 
ஒருவேளை 
சொல்லியிருந்தாலும் 
கேட்க 
காதுகளும் இல்லை 

நான் பிறந்தேன் 
நான் வளர்ந்தேன்
நான் வாழ்ந்தேன் 
நான் மறைந்தேன் 

மௌனமாய் தொடங்கி 
மௌனமாய் மறைந்த 
என் உடல் 
யாருக்காகவோ 
என்று 
நான் அறியாமலேயே 

உயிர்கள் வாழ 
உறைவிடம் ஆனேன்... 
உடல்கள் வைக்க 
சவபெட்டியுமானேன்....

எல்லாம் அவன் செயல் 
என்ற வாசகம் 
எல்லாருக்கும் பொருந்துவதை 
மௌனமாகவே 
உணர்ந்தேன்.... 

மௌனம் 
தொடக்கமும், முடிவுமாய்... 
ஒரு அர்த்தம் சொன்னது! 


எனது மின்னணுப்  பிம்பக்கருவியை வைத்துக் கொண்டு ஒரு சிறிய காட்டிற்குள் போன போது அங்கு இருந்த இந்த மரமும், அருகிலேயே விழுந்து கிடந்த இன்னொரு மரமும் அந்தக் காலை நேரத்தில் ஒரு மயானம் போல் காட்சி அளித்தது. அந்தப் படத்தைதான் மேலே காண்கின்றீர்கள். அந்த அமைதியான வாழ்வு யாரும் கண்டுகொள்ளாத ஒன்று என்றாலும், எனக்குள் அது ஒரு தத்துவம் சொன்னது.

மௌனமாய் மௌனத்தில் பிறந்து மௌனமாய் மௌனத்தில் கரையும் மரம் பேசினால் எப்படியிருக்கும் என்ற சுய சரிதையை இதை என் மனம் சொன்னது.

--முகில் 

No comments:

Post a Comment