Sunday, January 30, 2011

ஒரு எண்ணம்... முயற்சி... இறையுணர்வு...

வருவது எங்கே என்றறியோம்
வந்தபின் உலகம் நாமறிவோம்
போவது எங்கே என்றறிவோம்
போகும் தருணம் நாமறியோம்.

உயிரின் பலபெயர் நாமறிவோம்
உயிரின் உருக்கள் நாமறிவோம்
உருவே இல்லா ஓருயிரின்
உன்னதம் எதுவென நாமறியோம்.

கடவுள் அன்பென கல்வி பண்பென
கற்றுத் தந்த உள்ளவியல்.
கற்றவை கற்றும் நின்றிடல் ஆகா
காரணம் தந்திடும் உலகவியல்

ஒவ்வொரு நொடியும் ஒரு பிறப்பெடுக்கும்
உள்ளச் சாயம் மாற்றுமியல்.
உலக வாழ்வு தருணச் சாய்வென
உரைக்கும் உண்மை இயல்பியல்.

தமக்கென வாழும் வாழ்வு சரியே
தமதென கொள்ளும் பாங்கும் சரியே
அளவினை மீறிடும் ஆசைகள் ஏனோ
அடக்கிட முடியா ஆவலியல்

சுவர்களுக் குள்ளே சுகமாய் உறங்கும்
சுயமும் சுற்றமும் சுயநலம் என்று
எண்ணம் உள்ள இதயங்க ளுண்டா?
சுவரே இல்லாச் சாலை யோரம்
சுருண்டு கிடக்கும் உயிர்களுக் கெல்லாம்
சுகங்கள் அறியா சோக வியல்.

உலகின் போக்கில் காணும் உண்மைகள்
உள்ளம் உருக்கும் நாணும் உண்மைகள்
எண்ணம் எழுதினேன் எதையோ இயம்பினேன்
என்று நிற்காமல் என் செய்வேன்?
இரையே இல்லா இச்சீர் மாற்ற
என்று நானும் நன் செய்வேன்?
இன்று கண்கள் சிந்திய கண்ணீர்
இதயம் உருகிட முயல்கின்றேன்
இனிவரும் நாட்களில்
இவர் நிலை மாற்ற
இறையைக் கேட்டேன்- பதிலில்லை
இயல்பைக் கேட்டேன்- இயங்கினேன்...

என்போல் ஒவ்வொரு உள்ளம் தேடி
எடுத்த காரியம் உயர் வடைய
எழுந்தேன்...நடந்தேன்...
எண்ணம் தெளிந்த உணர்வுடனே
என்னுள் கண்டேன் இறைவனியல்.





1 comment:

  1. suvare ellach saalayora sogaviyal....
    manathai urukkukirathu....
    aanal atharku mattum vidivukaalame ellaya?

    ReplyDelete