Saturday, November 13, 2010

என் தோழியின் புத்தகம்!

ஒரு வானவில் போல்
தெரிந்த கண்களில்
ஒட்டியிருந்ததன...
சோகங்களின்
நிற வளைவுகள்...

பாரங்கள் சுமந்த
மெல்லிதயம்
சொல்ல முயன்ற
அமைதி வார்த்தைகளில்
 அந்தரங்கம் அரங்கேறியது

வாழ்க்கையின்
விசுவரூபம்
ஒரு பிம்பம் போல்
கண்ணீரில் வழுக்கியது

உணர்வுகளை
எண்ணிப் பார்க்க
கணக்காளன் இல்லாத
இந்தக் கடையில்
இரவுநேரப் பணிக்கு
ஆட்கள் தேவை என்று
ஒரு வாசகம்...
பார்வையில் பரிமாறப்பட்டது.

கைமாறும் காகிதங்களில்
காந்தி.
எமது தேசத்தின் அன்பு
ஒளிவுகளிலும்
ஒழியாமல்....

ஒரு வாழ்க்கையின்
வரைபடமாய்
கலாச்சாரம்
இரவில் கரைந்தது.

தெரியாத உறவுகளில்
அறியாமல் அடைந்த
திண்ணைகளில்
ஒரு புறம்
காமம் எழுதிய கதை
மறு புறம்
கனவுகள் தொலைந்த சிதை

மோகமும் சோகமும்
மோதிய விநாடிகளில்
சில சிதறல்களாய்
வாழ்க்கை ஓடிய
வளைவுகளில்
நாளையின் விடிவு.

நிதர்சனத்தின் நிழலில்
அவள் சபை....

நியாயம் அநியாயம்
சமத்துவமாக...
இந்தத் தோழியின்
திவ்யதரிசனத்தில்
சில இதயங்கள் வாழ....

திரை மறைவில்
எழுதிய மறையாய்...
இவள்....

இவளைப் படிக்க வரும்
இரவும் பகலும்....
இந்த வாழ்க்கையின்
இறையருளாய்...

என் விபச்சாரத் தோழியின்
ஏக்கங்களில்
ஒரு சமுகத்தின்
தொடர்கதை.
பெயரில்லா
இந்தப் புத்தகம்....

எல்லாம் வாழ்வின்
அத்தியாயங்களே!

1 comment: