Thursday, June 4, 2009

நாளை அந்த நாள் வருமோ?













வெண்ணிலா வெளிச்சத்தில்
தென்றல் விளையாடும்
திண்ணையில் கிடந்த சுகம்

வானத்து விளக்குகளின்
வர்ண ஜாலங்களை
அண்ணாந்து பார்த்து
அயராமல் நின்ற சுகம்

காலாற வயல் வரப்பில்
நாற்றுகளின் நடனத்தில்
மனம் லயித்து சென்ற சுகம்

பொதிகை மலை சாரலும்
பூவாசத் தென்றலும்
புன்னகைக்கும் பூக்களுமாய்
பூரிக்கும் இயற்கை எழில்
என்னூரின் இதமெல்லாம்
இல்லாமல் வாழ்கின்ற
வாழ்வு கொஞ்சம் வலிக்கிறது

நாலரை மணிக்கெல்லாம்
கண்விழித்து காணம் பாடும்
குருவிகளின் கொக்கரிப்பும்
புலர்கின்ற சூரியனின்
விரிகின்ற ஒளியிறகின்
செவ்வானக் கீற்றுகளும்
சிந்தையினைக் கொள்ளை கொள்ளும்
பெண்ணாரின் கோலங்களும்
காலைநேரக் கலப்பைகளும்
வேலைசெல்லும் உழவர்களும்
பள்ளிசெல்லும் சிறுசுகளும்
பாம்படக் கிழவிகளும்
வாய்கிழிய கூவி விற்கும்
மிதிவண்டி வியாபாரிகளும்...
வண்ணமாய் நெஞ்சினுள்ளே
வாழ்கின்ற சித்திரங்கள்
இவை இல்லாமல் வாழ்கின்ற
வாழ்வு கொஞ்சம் வலிக்கிறது.....

கிராமத்து வாழ்வின்
ஞாபகங்கள் சிந்தையிலே
கிளறுகின்ற இன்பம்தான்
கனவுலகில் வாழ்கின்ற
காட்சிகளாய் பிரதிபலிக்கும்

காலத்தின் போக்கில்
காற்றடிக்கும் திசையில்
போகின்ற வாழ்க்கை...

திட்டங்கள் தீட்டி
தீர்மானம் கூட்டி
தேவைகள் மீட்டி
செல்கின்ற வாழ்க்கை

ஒவ்வொன்றாய் விட்டுவிட்டு
ஒவ்வொன்றை பிடித்தவராய்
தேடல்கள் மிகுந்த
சிற்றீசல் வாழ்க்கை....

போனதெல்லாம் வாராது
என்றமொழி தரும் ஏக்கம்
என்மனதில் உள்ளதடி
எப்படித்தான் சொல்வதடி?

நாளை அந்த நாள்வருமோ?
நானும் ஏக்கம் கொண்டுவிட்டேன்
ஆயிரம் மைல்களுக்கு அப்பால்என்
சிறுபிள்ளை உள்ளத்தின்
சிந்தனைகள் வாட்டுதடி...

என் மனதின் ஏக்கம்...
சொன்னாலும் கேட்காமல்
சுவரிடம் பேசிய
சோக வார்த்தைகளாய்
நெஞ்சினுள்ளே சுடுகிறது....
நேரம்தான் போகிறது...

நாளை அந்த நாள் வருமா?
சொல்லடி என்னவளே!

No comments:

Post a Comment