Friday, April 9, 2010

நிந்தனை ஏனடி சக்தி?

புதிய தொரு உலகம் செய்வோம்
புதுமை களித் தினிமை செய்வோம்
பொலிவு மிகு சொல் நிறைவாய்
பொழிந்த சொற் களிப் பினிலே
விழி திறந்து முறங்கு கின்ற
வீன ராகி னோமோ நாம்?

வைய மெங்கும் மானிட ராய்
வாய்த்த தொரு பிறப் பினிலே
வாழு கின்ற பொழு திதிலே
வறுமை கொல்லு மொரு பக்கம்
வதம் பலவும் வகை வகையாய்
வஞ்சம் கொல்லும் ஒரு பக்கம்

மத மதுவும் மருள் சேர்க்கும்
மடமை மிகு அர சியலும்
மதி இழந்து மாசு கொண்டு
மூச்சு போலும் போதை யுற்று
மூர்க்கர் போலே சாதி வெறி
மூழ்க வைக்கும் சாக் கடலாய்
மனித வாழ்வின் நாற் றங்கள்
மலிந்து வரும் தாக் கங்கள்...

கற்க கசடற என்ற மொழி
கற்றவை நிற்க என்ற வழி
செல்ல மனம் சிந்தனை இன்
சீர்மையுறு பக்தியில் செறித்த வழி;
இவை தருமே உள்ள ஒளி
இது வறியாப் பொல் லாங்கில்
இருள் கவிழ்ந்த நிலை யிங்கே...

நிந்தனை ஏனடி சக்தி? நீ
தந்து பிறந்த மனித ரிலே
நல்லவர் தீமதிச் சிறி யவர்
என்ற பிரி வினை நினதாமோ?
வெந்திடும் யாக்கை அறிந்த பின்னும்
வேஷங்க ளிடுவதும் நின் அருளாமோ?
வேடிக்கை காண்பதும் சரி யாமோ?

எத்தனை பிரிவினை எமக் குள்ளே!
பஞ்சம் பசி பட்டினி நோயென
பரி தவிக்கும் பாவ சீவிகள்
செல்வம் சேர்த்து ஈயா தவரும்
கொலைகள் புரிந்து கூத் தடிப்பவரும்
இருந்தும் மாய்ந்த நிலயி லுழலும்
மனிதரோ, மனித உருவில் பேயரோ
யாரருள் தாயே உன தாமோ?

அறிவார் ஆயினும் அன்பு செயார்
அக மதில் இல்லா அன்பு
செய லதில் வருதல் சாத்தியமா?
மாற்றம் வேண்டும் தாயே நீ
மாற்றிட வேண்டு முன் புதல்வரை
மனிதம் அறிந்திடல் மகிமை யெனில்
மறுபடி புதுஒரு உலகம் செய்வாய்

இனி செய் யுலகின் பிறப்பாக
என் செய்வாய் ந்நீ சக்தி?
மறந்தும் தவறுகள் புரியாப் பரமே
உனக் கொரு சக்தி கேட்பாயோ?
மதிகெடு மனிதனின் போதை விட்டு
முகத் திரை போட்டுக் கொள்வாயோ
மாற்றம் வேண்டியே புது உலகில்
மரமும் செடியும் வளர்ப் பாயோ?
மனதில் சாந்தம் கொள் வாயோ?

No comments:

Post a Comment