Saturday, March 13, 2010

உலகம் ...மனிதம்...


ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகள் இதுவரை
இறைவனைக் கண்டதுண்டோ?

பல நூறு மதங்கள்
மண்ணில்
இறைவன் பெயரில் நன்றோ?

இயற்கையின் படைப்பில்
உயிர்கள் என்றால்
தெய்வம் இயற்கை ஆகாதோ

சக்தியின் ரூபம் எதிலோ?
சகலமும் படைத்தது எதுவோ?
கேள்விகள் கேட்டு
ஞானம் கற்கும்
கடவுளின் ரூபம் எதுவோ?

மனிதனின் மனம்
மதமெனும் குணம்
மதத்தினில் சிறுத்தது நன்றோ?

உயிர்களின் திறம்
மனித உருவினில்
மடமை கொள்வதும் நன்றோ?

சாதிகள் வைத்தான்
சடங்குகள் வைத்தான் - தோல்
வண்ணப் பிரிவினை
நாதியில் வைத்தான்...
ஆதியில் அம்மணம்
அந்தமும் அம்மணம்
மீதியில் மூழ்கிடும்
மூர்க்கமும் நன்றோ?

மதத்தின் பெயரில்
மனிதனை மனிதன்
மாய்ப்பதும் ஏய்ப்பதும் நன்றோ?

இன்னொன்றைக் கொன்று
ஒன்று வாழும்
இயற்கையின் விதியில்
மிருகம் வாழும்

மிருக மரபிலும்
மிகுந்த கேவலம்
தனது இனத்தை
தானே கொல்லும்
மனித வெறியும் நன்றோ?

அரசியல் கொள்ளையர்
ஆளும் சூழ்ச்சியில்
அறியா பேதை மக்கள்

கற்றும் மறக்கும்
கயவர் போலே
கற்றவருள்ளும் மூடர்...

பட்டினி பசியென
உண்ண உணவிலை
பஞ்சம் கொல்லும்
ஒரு பக்கம்

உண்டது மிஞ்சி
உணவை எறியும்
உலகின்
இன்னொரு பக்கம்

உலகம் முழுதும்
ஒரு குடும்பம்
உலகின் சொத்து
அனைவருக்கும்
என்று பகிர்தல்
மனிதம்....

ஒருவன் தலைமுறை
சிறந்து வாழ
ஒருவன் உழைக்கும்
திறன் நன்று....

தந்தை உழைக்க
தாயும் உழைக்க
மைந்தர் மகிழும்
தண்மை போல்

உலகின் மூலையில்
யார் உழைத்தாலும்
ஏங்கும் இன்னொரு
பட்டினி சகோதரன்
நோயில் சகோதரி
இவர்களுக்கு ஈதல்
இன்பம் சேர்க்கும் மனிதம்.

மதத்தில் திமிரும்
அகங்காரம் நீ...
நீ என்ற உன்னை
மதம் என்ற பண்பை
குறைத்தே மதத்தில்
'னி' சேர்க்க மனிதம்

அகங்காரம் தரும்
சுயநலம் விட்டு
அன்பு நீ சேர்க்கலாம்
மனிதப் பண்பு நீ சேர்க்கலாம்

நாளைய உலகம் அதற்க்கு
நல் மனிதர்கள் வாழும்
மனிதம் என்றே பெயரிடலாம்
உலகம் மனிதம் என்றே மாறிடலாம்..

2 comments:

  1. அருமையாயிருக்கு! வாழ்த்துக்கள்!

    நானும் மனிதத்தைத்தான் தேடுகிறேன்!

    எங்கே?
    இங்கில்லையே!
    உங்கு எப்படி?

    ReplyDelete
  2. நண்பர் தங்க முகுந்தன் அவர்களுக்கு...

    உங்கள் அன்பிற்கு நன்றி. எங்கிருக்கிறது மனிதம்?
    செயல்கள் கடினம். சொல் எளிது. செயல்களில் நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளுக்கு ஒன்று நன்மை செய்தால் மனிதம் தானே வரும். நன்றி, தொடர்பிலிருங்கள்.

    அன்பன்
    முகில்

    ReplyDelete