Sunday, May 30, 2010

அன்றாடம்....

வசந்தம்
வந்தது போல்
ஒரு உணர்வு...

உள்ளம்
கதவைத்
திறந்து வைத்திருந்தது.

உயிர்
ஊசலாடியது!

என்னை
அறியாமல்
நான்
என்னையே ரசித்தேன்.

உன்னை
யோசித்தேன்.

நொடிகளை
யாசித்தேன்.....

சில ஞாபகங்களை
இதயம் தாங்காது
என,

ஒரு
நிசப்தமான
பரிசானாய்!

நீங்காத
தூரங்களில்
நெருங்காத நிழல் போல்

என் நினைவுகளில்
பூத்த
உனக்கு

ஒரு வறண்ட பூமியின்
வானம் பார்த்த
தவமாய்,
வசந்தமானாய்....

இமை திறந்த
கணத்தில்
கண்ணீர்
விட்ட கண்களில்

காணல்....
கானல் போல்

வசந்தம்
எங்கோ மலர்ந்தது.....

அன்றாடம்
ஒரு வரம்

என் மூடிய இமைகளுக்குள்!

Friday, May 21, 2010

தூரங்கள் அருகினில்


ஒரு முறையாகிலும்
உனக்கு நன்றி நவிலல் வேண்டும்.

முயன்ற தருணங்களில்...
என் ஊமை உதடுகளின்
துடிப்பில் வெளிவராத
சங்கீதமாய்,
நடை பயின்ற வார்த்தைகள்...

மனதின் சுயநலங்கள்
மனதிடம் பேசிய கதைகளின்
மறுபுறம்
ஒரு சுகமாய்
உன் உருவம் சுமந்த
நினைவுக் காகிதங்கள்...

எண்ணமும் செயலும்
எதிர் துருவங்கள் போல்
என்றும் இணையாமல்
செல்லும்,
நாட்களின் சுமைகள்...
உன்னை கண்ட பின்
அடிமை போல்
கை கோர்த்துக் கொண்டன!

ஒன்றைப் பிடிக்க
ஒன்று ஓடும்
காலம் போன
கவிதைப் பரிதவிப்பில்

நீ
நான்
ஒரு கற்பனை...

நிம்மதியின் சாயல்
வெட்கம் கொண்டது.

அதன் முகத்திரை
அகற்றி
கொடுத்த முத்தத்தில்
இழந்த நொடிகளில்...

என்னைக் காணாத
தூரங்கள் எல்லாம்
இப்போது
அருகினில்....

Sunday, May 9, 2010

முகம்

நேசம் இணைய
இரு உள்ளங்கள்
உருவாக்கும்
உயிரெழுத்தின்
முதல் வரியாய்

ஒரு காலகட்டத்தின்
முகவரியாய்....

பிறந்த அழுகையொலி
பல உள்ளங்களின்
சிரிப்பின் அர்த்தமாய்

முகம்!

பரந்து கிடக்கும் பூகோளத்தில்
பலகோடி உயிர்களின்
தனித்துவமாய்....

மனக் கண்ணாடியின்
ஒவியமாய்

எத்தனையோ உணர்வுகளின்
எழுத்துப் பிரதி போல்
தெரியாத உறவுகளின்
பாலமாய்...

முகம் பார்க்க
வரும் சுகம்
உள்ளங்கள் ஏங்கும்.

நட்பாய்,
காதலாய்
அன்பாய்
உறவாய்....
நேற்றைய
இன்றைய
இருப்பின் அடையாளங்களாய்...

முகத்தின் பிம்பங்கள்
உயிரின் சுவடுகளாய்
காதலில் பிறந்து
வாழ்வைத் தொடரும்.

காதலைத் தூண்டும்
உள்ளத்தில் முகமே
கனவினைத் தூண்டும்.

கற்பனை செழிக்க
விருப்பத்தின் முகம்,
பாசத்தின் முகம்,
அன்பின் முகம் என,
வானாய்,
நிலவாய்
சூரியனாய்
நட்சத்திரமாய்
பூக்களாய்
மழையாய்
அலையாய்
முகிலாய்
காற்றாய்
காணுமிடமெல்லாம்
கண்களில் வரும்
உருவகம் ஒரு முகம்.

ஊடல் கொண்டு
மறைந்து நின்றாலும்
உள்ளத்தின் பின்புறம்
ஒளிந்து நிற்கும்
மறையா உருவிலும்
ஒரு முகம்.

அறிமுகம் இல்லாத
இதயப் பரிதவிப்பில்
ஆர்வம் காட்டும்
ஒரு அன்பின் முகம்...
வாழ்க்கையின் வழிதனில்
சோதனை தந்து
வேதனை கொண்டு
பார்க்க விரும்பா
சாபமும் பெறும்
ஒரு முகம்...

முகத்தின் அகம்
அகத்தின் முகம்
இரண்டும் தகும்
முகம் தேடி
சகத்தின் முகமும்
முகத்தில் சகமும்
செல்லுதடி பெண்ணே...

முகம் வெல்லுதடி கண்ணே!
அகம் வெல்லுமோடி கண்ணே?