மழலை வீதிகளில் மழையாய் வீழ்ந்த
கனவுத்துளிகள்....
இகம் பரம் யாவும் அறியாத்
துறவின் விழிகள்....
தனியே செல்லும் பாதம் விழிகள் அறியா சுவட்டில்....
விதியா என்று கேட்டால்
வழிகள் தெரியும் இருட்டில்....
போகிறேன்....உன்னிடமிருந்து....வருகிறேன்...உன்னிடமே!
இதயம் என்ற
சிறு பேழையில்
இடுக்குகள் இல்லாத
சாலைகளில்
மோதித் திரளும்
எண்ணங்களின்
மூர்ச்சைகளில்
உள்ளும் வெளியும்
நடத்தும் ஒரு தவம்...
என்னைக் கேளாமல்
எங்கெங்கோ
பவணி செல்லும்...
எண்ணத்தின் இறக்கைகளில்
என் இதயம்!
ஒரு நொடி அன்பு,
ஒரு நொடி பண்பு
ஒரு நொடி சினம்
ஒரு நொடி கவலை
ஒரு நொடி சிரிப்பு
ஒரு நொடி மகிழ்ச்சி
மறு நொடி விரக்தி
என அன்றாடம்...
பல அவதாரங்கள்....
என் சுதந்திரத்தின்
சுய ரூபங்களில்
முகமூடி அணிந்து
யாருமறியா
துவாரங்களின்
வழியே
ஒழுகிக் கொண்டிருக்கும்
மணித்துளிகளின்
தசாவதாரங்கள்
அர்த்தங்கள் புரிந்தும்
அர்த்தங்கள் தேடியலையும்
அர்த்தமில்லாத உருக்களில்
என் வாழ்க்கையும்
உன் வாழ்க்கையுமே
அன்றாடம்
கண் விழித்துச்
செய்யும்
ஒரு தவம்....